![Kayadu Lohar](http://image.nakkheeran.in/cdn/farfuture/cQN6PibQw7VlHeW7nklfOZUqXCQG2ilikXSHgVjoc70/1628507983/sites/default/files/inline-images/156_3.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனனுடன் கைகோர்த்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்திற்கு 'நதிகளிலே நீராடும் சூரியன்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்த நிலையில், தற்போது 'வெந்து தணிந்தது காடு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பை திருச்செந்தூர், சென்னை, மும்பை ஆகிய பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, தற்போது முதற்கட்ட படப்பிடிப்பை திருச்செந்தூரில் தொடங்கியுள்ளது. நடிகை ராதிகா சரத்குமார் இப்படத்தில் சிம்புவிற்கு தாயாக நடித்துவருகிறார். இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்த விவரங்களை படக்குழு இன்னும் வெளியிடாத நிலையில், கதாநாயகியாக நடிப்பது யார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவரது பூர்வீகம் அசாம் மாநிலமாகும். பல ஆண்டுகளுக்கு முன்பே கயாடு லோகர் குடும்பம் புனேவிற்கு குடிபெயர்ந்தது. அங்கிருந்து பட வாய்ப்புகள் தேடிவந்த இவர், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிற தென்னிந்திய மொழிகளில் நடித்ததைத் தொடர்ந்து, 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகிறார். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.