Skip to main content

“படம் பார்த்ததற்கு எனக்கு சொகுசு கார் தந்திருக்க வேண்டும்” - கார்த்திக் ப. சிதம்பரம்

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Karti p Chidambaram tweet about movie

 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவர் ப. சிதம்பரம். தமிழகத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவின் நிதி அமைச்சராகவும் இருந்தவர். இவரது மகனும், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினராகத் தற்போது இருந்து வருபவருமான கார்த்திக் ப. சிதம்பரம். காங்கிரஸ் கட்சி தொடர்பான சில விசயங்களை, விமர்சனங்களை சமூக வலைத்தள பக்கத்தில் மறைமுகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பதிவிடுவார். ராகுல்காந்தி பாராளுமன்றத்தில் நுழையும்போது எதிரே நின்ற கார்த்திக் சிதம்பரம் கை குலுக்க நீட்டியபோது ராகுல்காந்தி கை கொடுக்காமல் மறுத்து சென்றுவிட்டார். இது சமூக வலைத்தள பக்கத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

 

5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான போது காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. எல்லோரும் வருந்திக் கொண்டிருந்த போது, கார்த்திக் ப. சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘நெட்பிளிக்ஸ்ல பார்ப்பதற்கு நல்ல படம் இருந்தால் பரிந்துரையுங்கள்’ என்று பதிவிட்டிருந்தார். சொந்த கட்சி பின்னடைவை சந்தித்தபோதும் அதையும் மீறி சினிமா பார்க்கும் அளவிற்கு தீவிர சினிமா ரசிகராகவும் இருந்திருக்கிறார். 

 

இந்நிலையில் நேற்று சினிமா தொடர்பாக ஒரு பதிவிட்டிருக்கிறார் அதில், “நேற்று இரவு ஒரு தமிழ் திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பார்த்ததற்கு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ஒரு சொகுசு காரை பரிசாக அளித்திருக்க வேண்டும்.” என்று பதிவிட்டிருக்கிறார். சமீபத்தில் ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சொகுசு கார் பரிசளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் கார்த்திக் ப. சிதம்பரம் ஜெயிலர் திரைப்படத்தைத் தான் கிண்டலடித்திருக்கிறார் என்று சொல்லி ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்