![karnataka state rrr movie issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/n0eUBXC3RZXT9M3ynFtxjc9g_dAV1p2PuQAeu7YNQdQ/1648127539/sites/default/files/inline-images/397_1.jpg)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான "ஆர்ஆர்ஆர்" திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ,கன்னடம் ஆகிய மொழிகளில் மார்ச் 25ஆம் தேதி (நாளை) பிரம்மாண்டமாக திரைக்கு வரவிருக்கிறது. இப்படம் தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீத்தாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கற்பனையான காலகட்ட போர் கதையாகும் . ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜுவாகவும், ஜூனியர் என்டிஆர் கொமரம் பீமாக நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆலியா பட், அஜய் தேவ்கன், அலிசன் டூடி, ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. அந்தந்த மாநிலங்களில் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் மாநில மொழிகளில்தான் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் மட்டும் 'ஆர்.ஆர்.ஆர்' படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் அதிக திரையரங்குகளிலும், கன்னட மொழியில் குறைவான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு கன்னட மொழி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கன்னட மொழி ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான முன்பதிவும் தொடங்கப்படாமல் இருக்கவே படக்குழு கன்னட மொழியை புறக்கணிப்பதாக கூறிய ரசிகர்கள் ட்விட்டரில் #BoycottRRRinKarnataka என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.
இந்நிலையில் சுதாரித்துக்கொண்ட திரையரங்க விநியோகஸ்தர்கள் "ஆர்ஆர்ஆர்" கன்னட பதிப்பிற்கு முன்பதிவை தொடங்கியுள்ளனர். இது கன்னட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதே மாதிரியான சிக்கல் புஷ்பா, ராதே ஷ்யாம் ஆகிய படங்களும் எழுந்ததாக கன்னட ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.