![karam johar](http://image.nakkheeran.in/cdn/farfuture/QnP0-fwr1xYASKzskWTqnro-CkTqQ-w9TS36w-h7h38/1601284901/sites/default/files/inline-images/karan-johar_2.jpg)
சுசாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் பல சர்ச்சைகள் உருவாகி வருகிறது. போதைப் பொருட்களைப் பல பிரபலங்கள் பயன்படுத்துவதாகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதில் பல பிரபலங்களை என்சிபி அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் போதைப் பொருட்களை ஊக்குவிப்பதாக சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. முன்னதாக கரண் ஜோஹர் நடத்திய விருந்து நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் நடிகையர்கள் போதையில் தள்ளாடுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலானது. அந்த பழைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வருவதால், பலரும் கரண் ஜோஹரையும் என்சிபி அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து கரண் ஜோஹர் கூறுகையில், “கடந்த ஆண்டு என் வீட்டில் நடந்த ஒரு பார்ட்டியில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக சில ஊடகங்களின் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன.
அது முற்றிலும் தவறான தகவல் என்று கடந்த ஆண்டே நான் மறுப்பு தெரிவித்திருந்தேன். தற்போது இவை மீண்டும் தவறான முறையில் பரப்பப்படுவதால் இதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
எந்த ஒரு போதை வஸ்துக்களும் அந்த பார்ட்டியின் போது பயன்படுத்தப்பட வில்லை. போதைப் பொருட்களை நான் பயன்படுத்துவதுமில்லை, அவற்றை ஊக்குவிப்பதுமில்லை என்பதை சந்தேகத்துக்கிடமின்றி மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்.
என்னையும், என் குடும்பத்தையும், என் தயாரிப்பு நிறுவனத்தைக் களங்கப்படுத்தவே இதுபோன்ற பொய்யான செய்திகளும், வீடியோக்களும் பரப்பப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக ஊடகங்கள் என்னைப் பற்றிய தவறான செய்திகளைப் பரப்பத் தொடங்கியிருக்கின்றன. ஊடகத்தில் இருப்பவர்கள் இதை நிறுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். இல்லையெனில் இந்த அடிப்படையற்ற தாக்குதல்களுக்கு எதிராக நான் எனது உரிமையைப் பாதுகாத்துக் கொள்ள சட்டத்தை நாட வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கரண் ஜோஹர் வீட்டில் நடந்த பார்ட்டி வீடியோவுக்கும், போதைப் பொருள் வழக்குக்கும் தொடர்பில்லை என்று என்சிபி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நேற்று (27.09.20) நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய என்சிபி தென்மேற்கு பிராந்திய துணை இயக்குநர் ஜெனரல் எம்.ஏ ஜெயின், ''கரண் ஜோஹர் வீட்டில் நடந்த பார்ட்டியின்போது எடுக்கப்பட்ட வீடியோவுக்கும் தற்போது நடந்து கொண்டிருக்கும் வழக்கு விசாரணைக்கும் தொடர்பில்லை'' என்றார்.