![kantara movie Varaha Roopam song banned by court](http://image.nakkheeran.in/cdn/farfuture/55FTp3cCfgTXt3lk22C6gS30hGq089Z79s13AVPT9-o/1667037211/sites/default/files/inline-images/20_51.jpg)
'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள கன்னடப் படம் 'காந்தாரா'. சமீபத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு அண்மையில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/ICyaQi_AMT76nE_f9EujxtIKPRaljit56ElhijM8VxA/1667037239/sites/default/files/inline-images/500-x-300_1.jpg)
அந்த வகையில் சிம்பு, தனுஷ், கார்த்தி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பாராட்டியிருந்தனர். மேலும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் பரிந்துரையாக ‘காந்தாரா’ இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தார். இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படம் என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட ரஜினிகாந்த் தற்போது ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இதனிடையே ‘தய்க்குடம் பிரிட்ஜ்’ என்ற மலையாள இசைக்குழு, காந்தாரா படத்தில் இடம்பெறும் 'வராஹ ரூபம்’ பாடல் தங்களின் 'நவரசம்' ஆல்பமில் இருந்து திருடப்பட்டுள்ளதாகவும், எனவே இப்பாடலுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோழிக்கோடு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி, திரையரங்குகளில் 'வராஹ ரூபம்’ பாடலைத் திரையிடுவதற்குத் தடை விதித்துள்ளது. மேலும் யூ-ட்யூப், ஸ்பாட்டிஃபை உள்ளிட்ட சில ஆப்களிலும் இப்பாடல் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த தடை தொடர்பான நோட்டீஸை படக்குழுவுக்கு நீதிமன்றம் அனுப்பியுள்ளது.
‘தய்க்குடம் பிரிட்ஜ்’ இசைக்குழுவின் குற்றச்சாட்டு தொடர்பாக நேற்று முன்தினம் காந்தாரா பட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், "இரண்டு பாடல்களும் ஒரே ராகத்தில் இசையமைக்கப்பட்டுள்ளதால் ஒன்று போல் தோன்றலாம்" என விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.