கன்னட திரைப்பட தயாரிப்பாளர்களில் பிரபலமானவர் வி கே மோகன் என்னும் கபாலி மோகன். நட்சத்திர ஹோட்டல் போன்ற பல தொழில்கள் செய்யும் தொழிலதிபரான மோகன், நிதி நிறுவனமும் நடத்தி வந்தார். கன்னட சூப்பர் ஸ்டாரான நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர்.
![vk mohan](http://image.nakkheeran.in/cdn/farfuture/Pp8gCP4unfNMoxe6YH5onKfaNwwdNKqk9qeh1W_XFLU/1585048447/sites/default/files/inline-images/vk%20mohan.jpg)
கடந்த சில தினங்களுக்கு முன்பு சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியவர்களிடம் கந்துவட்டி வசூலித்ததாகவும் கூறி பெங்களூரு சதாசிவநகரில் உள்ள மோகனின் பங்களா வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்து சில ஆவணங்களைப் போலீசார் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் ஹோட்டலில் தங்கியிருக்கிறார். அடுத்த நாள் நீண்ட நேரமாகியும் மோகன் வெளியே வராததால் சந்தேகமடைந்த ஹோட்டல் நிறுவனத்தினர் போலீஸுக்கு தகவல் அளித்துள்ளனர். உள்ளே வந்த போலீஸார் மோகன் இறந்திருப்பதை அறிந்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனையில் மோகன் தூக்கிட்டுதான் தற்கொலை செய்துக்கொண்டார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் ஏன் தற்கொலை செய்துக்கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது கங்கமனகுடி காவல் நிலைய போலீஸ்.