![kangana ranaut](http://image.nakkheeran.in/cdn/farfuture/MNEZUZY9kZE1n5oRyLh3pFPsAYHJMdtGLOiBvcQ7SG0/1603801484/sites/default/files/inline-images/kangana-ranaut_12.jpg)
இந்திய விமானப்படையில் பெண்கள் பல்வேறு பணிகளில் பணியாற்றியபோதும், 2016ஆம் ஆண்டுவரை பெண்கள் போர் விமானி என்னும் போர் விமானங்களை இயக்கும் பணியில் அணுமதிக்கப்படாமல் இருந்தனர். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் 2015ஆம் ஆண்டு பெண்களை, போர் விமானிகளாக பணியாற்ற அனுமதியளித்தது. அதைத்தொடர்ந்து மோகனா சிங், பாவனா காந்த், அவனி சதுர்வேதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு விமானப்படை தளங்களில் அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சியை முடித்த அவர்கள் கடந்த 2016ஆம் ஆண்டு போர் விமானிகளாக பதவியேற்றனர். இந்திய இராணுவத்தில் பெண்கள் நேரடியாக போரிடும் பணியில் அமர்வது இதுவே முதல் முறை.
இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாக வைத்து சர்வேஷ் மேவரா, 'தேஜஸ்' என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் பிரபல நடிகையும், சுஷாந்த் சிங் வழக்கில் தொடர்ந்து மகாராஷ்ட்ரா அரசை விமர்சித்து வருபவருமான கங்கனா ரணாவத் போர் விமானியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது.
இந்தநிலையில் அந்த படத்தில் நடிப்பதற்காக நேற்றிலிருந்து பயிற்சியை தொடங்கியுள்ளார் கங்கனா. இதுதொடர்பாக நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கங்கனா ரணாவத், “தேஜஸ் படக்குழு இன்றிலிருந்து பயிற்சிப்பட்டறையை தொடங்குகிறது. மிகவும் திறமை வாய்ந்த இயக்குனர் சர்வேஷ் மேவரா மற்றும் விங் கமாண்டர் அபிஜித் கோகலே ஆகியோருடன் இணைந்து பணிபுரிய தொடங்குவது மகிழ்ச்சியாக உள்ளது" என கூறியுள்ளார். இப்படம் ஏப்ரல் 2021 வெளியீடு என படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.