![kangana ranaut](http://image.nakkheeran.in/cdn/farfuture/kJclm9Df5ohEL79y3BKRpULZRIJZRFRVHNjF0WAivsg/1599632546/sites/default/files/inline-images/kangana-ranaut-1_2.jpg)
பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்குப் பிறகு கங்கனா ரணாவத் பலர் மீது குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இது பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் கங்கனா நடிக்கும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வந்த வாய்ப்பை தவிர்த்துவிட்டதாக பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "கங்கணா ரணாவத் பிரதான பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகச் சொன்னதால் ஒரு படத்தை ஒப்புக் கொள்ளவில்லை. மனதின் ஆழத்தில் ஒரு அசவுகரியமான நிலையை உணர்ந்தேன். எனது நிலையை அவர்கள் தரப்புக்குச் சொன்னேன். அவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டார்கள். சில நேரங்களில், நம் மனதில் எது சரியென்று படுகிறதோ அதுதான் முக்கியம். அந்தத் திரைப்படக் குழுவுக்கு என் வாழ்த்துகள்" என்று தெரிவித்திருந்தார்.
தற்போது இந்த பதிவிற்கு கங்கனா ரணாவத் பதிலளித்துள்ளார். அதில், “உங்களைப் போன்ற லெஜண்டுடன் பணிபுரியும் வாய்ப்பை நான் தவறவிட்டுவிட்டேன் சார். இது முற்றிலும் என்னுடைய இழப்பு. என்னைப் பற்றிய உங்களுக்குச் சங்கடமான எண்ணம் ஏற்பட என்ன காரணம் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் சரியான வழியைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்திருந்தார். இந்த பதிவிற்கு பாராட்டுகிறேன் என்று பி.சி. ஸ்ரீராம் பதிலளித்துள்ளார்.