கங்கனா ரணாவத் கடைசியாக தமிழில் சந்திரமுகி 2 படத்திலும் இந்தியில் தேஜஸ் படத்திலும் நடித்தார். இரண்டு படங்களும் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எமெர்ஜென்சி படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் கடந்த மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படம் தள்ளிப்போவதாக அறிவிப்பு வெளியானது. விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கங்கனா ரனாவத் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே அரசியல் குறித்தும் தனது கருத்துகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக பாஜகவை ஆதரித்து குரல் கொடுக்கிறார். இதனால் அவர் அரசியலில் விரைவில் இறங்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் 2024 தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் அவ்வப்போது தகவல்கள் உலா வந்தது. கடந்த ஆண்டு நடிகை ஹேமமாலினி எம்.பி யாக இருக்கும் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் கங்கனா போட்டியிடவுள்ளதாக கூறப்பட்டது.
கடந்த மாதம் குஜராத்தில் உள்ள சோமநாத் கோயிலில் கங்கனா தரிசனம் மேற்கொண்ட நிலையில், பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கிருஷ்ணர் அருள் புரிந்தால் தேர்தலில் போட்டியிடுவேன்” எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சில தினங்களுக்கு முன்பு சந்தித்தார். இந்த நிலையில் கங்கனா அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவுள்ளதாக அவரது தந்தை அமர்தீப் ரனாவத் தெரிவித்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.