திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா, கடந்த 3 ஆம் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு தலைப்புகளில் விதவிதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை அடுத்தாண்டு ஜூன் வரை கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது.
இதனிடையே கலைஞரின் நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாடு சார்பில் ஒரு பாடல் தயாராகி வருகிறது. ஜிப்ரான் இசையில் வைரமுத்து வரிகளில் இப்பாடல் உருவாகிறது. இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து பகிர்ந்த பதிவில், "கலைஞர் நூற்றாண்டுக்கு ஒரு புகழ்ப்பாட்டு எழுதியிருக்கிறேன். ஜிப்ரான் இசையில் யாசின் பாட நேற்று ஒலிப்பதிவு செய்தோம். இது தமிழ்நாட்டரசின் தயாரிப்பு. விரைவில் தமிழ்கூறு நல்லுலகுக்கு" எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் பாடல் எவ்வாறு ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்று ரெக்கார்டிங் செஷனில் எடுக்கப்பட்ட சிறிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் 'இருக்கின்றார்... இருக்கின்றார்.... கலைஞர் இருக்கின்றார்' என்ற வரிகளில் பாடல் தொடங்குவது போல் அமைந்துள்ளது. மேலும் 'ஏழையின் சிரிப்பிலும் இருக்கின்றார். ஏழையின் வீட்டிலும்...' என்ற வரிகள் இடம்பெற்றிருந்த நிலையில் அதனைப் பாடகருக்கு வைரமுத்து விவரிக்கிறார். பின்பு பாடகர் பாடிக் காண்பித்த பிறகு அதனைக் கேட்ட வைரமுத்து உடனே அந்த வரிகளை மாற்றுகிறார். ஏழை என்ற வார்த்தை அடுத்தடுத்து வருவதாகக் கூறி, 'ஏழையின் சிரிப்பிலும் இருக்கின்றார்...எளியவர் வீட்டில் எரியும் அடுப்பிலும்...' என மாற்றியுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டுக்கு
ஒரு புகழ்ப்பாட்டு
எழுதியிருக்கிறேன்
ஜிப்ரான் இசையில்
யாசின் பாட
நேற்று ஒலிப்பதிவு செய்தோம்
இது
தமிழ்நாட்டரசின் தயாரிப்பு
விரைவில்
தமிழ்கூறு நல்லுலகுக்கு...#கலைஞர்100 #kalaignar100 pic.twitter.com/oJ3ymsSnN9— வைரமுத்து (@Vairamuthu) June 15, 2023