
தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சங்கரதாஸ் சுவாமிகள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
நல்ல தங்காள் கதையின் கிளைமேக்ஸ்க்கு முந்தைய காட்சிவரை கடந்த பகுதியில் கூறியிருந்தேன். வேட்டைக்கு சென்றிருந்த நல்ல தம்பி, திரும்பிவந்து பார்த்தபோது தங்கை நல்ல தங்காள் அவளுடைய ஏழு குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்திருந்தாள். அவர்களுடைய பிணத்தை பார்த்து நல்ல தம்பி கதறி அழுவான். நல்ல தங்காளின் தற்கொலைக்கு நல்ல தம்பியின் மனைவிதான் காரணம் என ஊர் மக்கள் சொல்லியதையடுத்து, கோபத்தோடு அரண்மனைக்கு செல்கிறான். அங்கிருந்த தன்னுடைய மனைவியை அடித்து கொதிக்கிற சுண்ணாம்பு காளவாசலில் போட்டு கொலை செய்துவிடுகிறான். மேலும், அரண்மனையில் இருந்த மனைவியின் உறவினர்களை அடித்து நாட்டைவிட்டே துரத்திவிடுகிறான். பின், தங்கை நினைவில் இருந்து மீளமுடியாமல் பல மாதங்கள் சாப்பிடாமலேயே இருப்பான்.
தன்னுடைய நாட்டில் வறுமை என்பதால்தான் தன்னுடைய மனைவியை அவளுடைய அண்ணன் தேசத்திற்கு நல்லதங்காளின் கணவன் அனுப்பிவைத்தான். தற்போது தன்னுடைய நாட்டில் மழை பெய்து எல்லாம் செழித்தபிறகு தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துச் செல்வதற்காக காசி ராஜன் வருகிறான். வந்தவனுக்கு தன்னுடைய மனைவியும் குழந்தைகளும் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டு பேரதிர்ச்சி. அந்த துக்கம் தாங்காமல் காசி ராஜனும் தற்கொலை செய்ய முயற்சிப்பான். அப்போது வந்து அவனைத் தடுத்து நிறுத்திய இறைவன், நல்லதங்காளையும் ஏழு குழந்தைகளையும் சொர்க்கத்துக்கு அனுப்பிவைப்பதாக கதை முடியும். சங்கரதாஸ் சுவாமிகள் மட்டுமே ஆயிரம் முறை நல்லதங்காள் நாடகம் நடத்தியிருப்பார். அவரே வசனம், பாடல் எழுதி நடிக்கவும் செய்வார். சினிமா வருவதற்கு முன்பு சங்கரதாஸ் சுவாமியும் அவரது பாய்ஸ் நாடகக்கம்பெனியும் தமிழ்நாட்டிற்கு கிடைத்த வரப்பிரதாசம்.

ஒருமுறை சங்கரதாஸ் சுவாமிகள் எமன் வேஷத்தில் நடிக்கும்போது துயரமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. பெரிய மீசை, பரட்டை தலையுடன் கையில் கதாயுதத்தை எடுத்துக்கொண்டு எமன் தோற்றத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் வருவார். எமன் வேடம் அவருக்கு மிகப்பொருத்தமாக இருக்கும். அவர் நடிக்கும்போது பார்த்துக்கொண்டிருக்கிற மக்களுக்கு குலை நடுங்குமாம்.அன்று மதுரையில் விடியவிடிய நாடகம் நடக்கிறது. அந்த நாடகத்தை முடித்துவிட்டு அருகே இருந்த வைகை ஆற்றுக்கு மேக்கப்பை கலைப்பதற்காக சங்கரதாஸ் சுவாமிகள் குளிக்கச் செல்கிறார். அப்போது ஆற்றில் குளித்துவிட்டு ஒரு பெண் எதிரே வருகிறாள். எமன் தோற்றத்தில் வந்த சங்கரதாஸ் சுவாமியை, உண்மையான எமன் என நம்பி அந்தப் பெண் மிரண்டுவிடுகிறார். அந்த அதிர்ச்சியில் அந்தப் பெண் அங்கேயே விழுந்து இறந்துவிடுகிறார். அந்த சம்பவம் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. அந்த சம்பவத்திற்கு பிறகு என் வாழ்க்கையில் இனிமேல் நான் நடிக்கவே மாட்டேன் என்று சத்தியம் செய்துகொண்ட சங்கரதாஸ் சுவாமிகள், அதன் பிறகு கதை, வசனம், பாடல்கள் எழுதுவது மற்றும் நாடகம் நடத்துவதில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.