
தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், நல்லதங்காள் கதை குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
வறட்சி காரணமாக ஏழு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தன்னுடைய அண்ணன் தேசத்திற்கு நல்லதங்காள் கிளம்பி வந்தது குறித்து கடந்த பகுதியில் கூறியிருந்தேன். அண்ணன் தேசத்தில் எங்கு பார்த்தாலும் பசுமையாக இருந்ததால் தன்னுடைய குழந்தையின் உயிருக்கு இனி ஆபத்து வராது என நிம்மதி பெருமூச்சுவிட்டாள் நல்லதங்காள். பின், அண்ணன் அரண்மனை கதவைச் சென்று தட்டுகிறாள். அண்ணனின் மனைவி மூளி அலங்காரி வந்து கதவைத் திறக்கிறாள். என்ன என்று அவள் கேட்க, நல்லதங்காள் வறட்சி காரணமாக கணவனின் நாட்டை விட்டு கிளம்பிவந்தது குறித்து கூறுகிறாள். வறுமை நாட்டில் இருந்து வந்த நீ, வறுமையையும் அழைத்து வந்திருந்தால் என்ன செய்வது என்று கூறி நல்லதங்காளை உள்ளே வராதே என்கிறாள் மூளி அலங்காரி. உங்க அண்ணன் மிருக வேட்டைக்கு போயிருக்கிறார். அவர் வரும்வரை நீ வீட்டிற்குள் வரக்கூடாது. அவர் வந்து ஏதாவது கொடுத்தால் வாங்கிவிட்டு உங்கள் நாட்டிற்கே போய்விடு என மூளி அலங்காரி கூறுவதைக் கேட்டு நல்லதங்காளுக்கு அதிர்ச்சி. அண்ணன் வரும்வரை நாங்கள் எங்கு இருப்பது என நல்லதங்காள் கேட்க, அந்தக் கொட்டகையில் உன் குழந்தைகளுடன் படுத்துக்கொள் எனக் கூறிவிடுகிறார் மூளி அலங்காரி.
அங்கிருந்த கொட்டகையில் தங்கிக்கொண்டு அங்கு கிடைத்த கீரை, காய்கறிகளை குழந்தைக்கு கொடுத்து ஒரு வாரத்தை கழிக்கிறாள். அன்று ஒருநாள், அரண்மனை வேலை ஆட்கள் தோட்டத்திலிருந்து பழங்களை பறித்துக்கொண்டு வந்து கூடைகூடையாக இறக்குகிறார்கள். அதில் ஒரு கூடை தவறி விழுந்து பழங்கள் கொட்டிவிடுகின்றன. பழங்கள் கொட்டியதும் ஏழு குழந்தைகளும் ஓடிச்சென்று ஆளுக்கு ஒரு பழத்தை எடுத்து சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். திமிர் பிடிச்ச நாய்களா... என் வீட்டுக்குள்ள நீங்க வரலாமா என்று கூறி குழந்தைகளை மூளி அலங்காரி அடித்துவிடுகிறாள். திட்டக்கூடாத வார்தைகளில் திட்டி அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறாள்.
ஏழு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு நல்லதங்காள் நடக்க ஆரம்பிக்கிறாள். வழியில் இருந்த ஒரு கிணற்றில் தண்ணீர் குடித்துவிட்டு நீண்ட நேரம் யோசிக்கிறாள். ஏழு குழந்தைகளையும் அந்தக் கிணற்றிலேயே தூக்கி எறிந்துவிட்டு நாமும் அதில் விழுந்து செத்துவிடலாம் என முடிவெடுத்து, ஒவ்வொரு குழந்தையாக கிணற்றில் தூக்கி போட ஆரம்பிக்கிறாள். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பக்கத்தில் அந்தக் கிணறு இன்னும் உள்ளது. நல்ல தங்காள் கதை நாடகமாகவும் படமாகவும்கூட வந்துள்ளது. நாடகத்தில் ஒவ்வொரு குழந்தையை தூக்கி போடும்போதும் பாட்டு பாடுவார்கள். எவ்வளவு கல் நெஞ்சம் கொண்டவராக இருந்தாலும் அந்தக் காட்சி காண்போரை கண் கலங்க வைத்துவிடும். ஏழு குழந்தைகளும் நல்லதங்காளும் அந்தக் கிணற்றிலேயே விழுந்து இறந்துவிடுகிறார்கள்.
வேட்டைக்கு சென்ற நல்ல தம்பி திரும்பிவரும்போதே, நல்லதங்காள் இங்கு வந்தது குறித்தும் அவளை அரண்மனைக்குள் அனுமதிக்காமல் மூளி அலங்காரி விரட்டிவிட்டது குறித்தும் ஒருவர் சொல்லிவிடுகிறார். நல்ல தம்பிக்கு இதயமே நொறுங்கிவிட்டது. தங்கையும் குழந்தைகளும் எங்கு என்று ஆட்களுடன் தேட ஆரம்பிக்கிறான். ஒரு கிணற்றில் எட்டு பேரும் பிணமாக மிதப்பதை சிப்பாய் ஒருவன் கூறியதும் அலறியடித்துக்கொண்டு நல்லதம்பி ஓடுகிறான். தங்கச்சியின் சடலத்தை பார்த்து கதறி அழுகிறான். பின், அனைவரின் சடலத்தையும் ஒரே இடத்தில் வைத்து எரியூட்டுகிறான். இறைவன் அந்த ஏழு குழந்தைகளுக்கும் மோட்சம் கொடுத்ததாக நம்பிக்கையும் உண்டு. இன்றைக்கு நல்லதங்காளை கோவில் கட்டி வழிபடுகின்றனர். அந்தக் கோவிலில் ஏழு குழந்தை, நல்ல தங்காள் ஒரு கல்லில் படுத்திருப்பதுபோல இருக்கும். அதற்கு முன்பாக அம்மன் கோவில் ஒன்றும் இருக்கும். நல்ல தங்காளை குலதெய்வமாக வழிபடுபவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் இருக்கிறார்கள்.