
தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் மறைந்த நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்திருப்பார். லட்சுமி கதாநாயகியாக நடித்திருப்பார். ஜெயகாந்தன் எழுதிய அற்புதமான காவியம் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல். அதைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. மழையில் நனைந்து கொண்டிருந்த பெண்ணை, ஒரு வாலிபன் மழையில் நனையாதே என்று கூறி காரில் அழைத்துச் சென்று கற்பழித்துவிடுவான். பிறகு அந்த பெண்ணை அவள் வீட்டருகே இறக்கிவிட்டுச் சென்றுவிடுவான். அந்தப் பெண் தன் தாயிடம் நடந்ததைக் கூறுகிறாள். தலையில் இடி விழுந்ததுபோல அவள் தாய் உணர்கிறாள். பின், அவளுடைய அண்ணன் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறான். அவன் அழைத்துவரும் மாப்பிள்ளைகளை ஏதாவது காரணமா சொல்லி அவர் தட்டிக் கழித்துக்கொண்டே இருப்பாள். என்றைக்காவது ஒருநாள் நான் அவனைச் சந்தித்து விடமாட்டேனா என்று அவனையே மனதிற்குள் நினைத்துக் கொண்டு இருப்பாள். 12 வருடங்கள் கழித்து அவனைச் சந்திக்கையில் அவன் இரு குழந்தைகளுக்குத் தகப்பனாக இருப்பான். படம் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கும்.
வெண்ணிற ஆடை படம்தான் ஸ்ரீகாந்திற்கு முதல் படம். ஜெயலலிதாவிற்கு ஜோடியாக அவர் நடித்திருப்பார். அந்தப் படம் வெளியானபோது இவரா ஹீரோ என்று திரையரங்கில் ரசிகர்கள் கூச்சலிட ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் கூச்சல் தாங்காமல் அந்த தியேட்டர் ஓனர் கையில் கம்பெடுத்துக்கொண்டு திரைக்கு முன்னால் வந்து நின்றுவிட்டார். படம் பிடிக்கலான எந்திருச்சு போய்டு... ஏதாவது சத்தம் போட்டு திரையில் என்னத்தையாவது எறிஞ்சிங்கனா கொன்னேபுடுவேன் என்றார். அவர், ஆள் பார்க்கவே பலமான ஆள் மாதிரி இருப்பார். அவர் வந்து அரட்டியதும் அத்தனை பேரும் அமைதியாகிவிட்டனர். உண்மையிலேயே அப்போது இருந்த ஸ்ரீகாந்தை யாரும் ஹீரோவாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இப்படி இருந்த ஸ்ரீகாந்த், சில நேரங்கள் சில மனிதர்கள் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
நான் அந்த நேரத்தில் ஸ்ரீகாந்தை வில்லனாக என் படத்தில் நடிக்க வைக்க விரும்பினேன். அதற்காக அவர் வீட்டிற்கு நான் நேரில் சென்றேன். என்னை அன்போடு வரவேற்ற அவர், சில நேரங்களில் சில மனிதர்கள் படம் பார்த்தீர்களா என்றார். நான் அவருடைய நடிப்பை வெகுவாக பாராட்டிப் பேசினேன். பின், என்ன விஷயமாக வந்திருக்கீங்க என்றார். நான் ரஜினியை ஹீரோவாக வைத்து படமெடுக்கிறேன். அந்தப் படத்தில் நீங்கள் வில்லனாக நடித்தால் வியாபார ரீதியாக எனக்கு உதவிகரமாக இருக்கும் என்றேன். அதுக்கென்ன கலைஞானம்... தொழில்தான... எந்த வேஷம் கொடுத்தாலும் நடிக்கிறேன்... நீ கதைகூட சொல்ல வேண்டாம்... தேதி மட்டும் கொடு என்றார். சம்பளம்கூட உன்னால என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடு எனக் கூறிவிட்டார். அந்த அளவிற்கு நல்ல மனிதர் ஸ்ரீகாந்த். அப்படிப்பட்ட ஸ்ரீகாந்த்தின் வாழ்க்கையில் திடீரென வீழ்ச்சி ஏற்பட்டது. அதுபற்றி அடுத்த பகுதியில் கூறுகிறேன்.