
ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஸ்வீட்ஹார்ட்'. இப்படத்தில் கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தை தயாரிப்பதோடு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவும் செய்திருக்கிறார்.
இப்படம் மார்ச் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பொன் ராம், தேசிங் பெரியசாமி, சுரேஷ், கார்த்திக் வேணுகோபாலன், ஹரிஹரன் ராம், கலையரசன் தங்கவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசுகையில், '' ஸ்வீட்ஹார்ட் என்ற இந்த படத்தின் டைட்டிலே நன்றாக இருக்கிறது. இந்த படத்தைப் பற்றிய அறிவிப்பு தொடர்பாக வெளியான காணொளி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்திற்கான போஸ்டரில் நான்கு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வடிவமைத்திருப்பது சிறப்பாக இருக்கிறது . என்னுடைய 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்திலும் இதே போல் தான் போஸ்டரை வடிவமைத்திருப்பேன். அதை பார்ப்பது போல் இருக்கிறது. படத்தின் முன்னோட்டம் நல்ல பொழுதுபோக்காக இருந்தது. ரியோவின் தோற்றம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அது நம் மண்ணின் தோற்றம். இந்த படத்தின் டிரைலரில் நல்லதொரு 'வைப்'இருக்கிறது. படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

யுவன் சாருக்காகத்தான் இங்கு வந்தேன். இன்றைக்கு சிம்புவின் 50வது படம் உருவாகிறதென்றால் அதற்கு யுவன் தான் காரணம். அவரிடம் கதை சொன்ன போது எதைப் பற்றியும் அவர் பேசவில்லை. எப்போ ஒர்க் ஸ்டார்ட் பண்ணலாம் என்றார். இந்தப் படம் கிட்டத்தட்ட டிராப் ஆகிவிட்டது. ஆனால் யுவன் சிம்பு சாருக்கு ஃபோன் பண்ணி பேசினார். அவர் கொடுத்த ஊக்கம் தான் இப்போது இந்தப் படம் நடக்கிறது” என்றார்.
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகுவதாக அறிவிக்கப்பட்டது. இது சிம்புவின் 48வது படமாக அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் படப்பிடிப்பு தொடங்கப்படாமலே இருந்தது. பின்பு கமல் இப்படத்தில் விலகியதாக தகவல் வெளியானதை அடுத்து வேறொரு தயாரிப்பாளரை சிம்பு மற்றும் தேசிங் பெரியசாமியும் தேடி வந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து இப்படம் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் பின்பு இப்படம் தொடங்கப்படுவதாகவும் சிம்புவே இப்படத்தை தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. சிம்புவின் 50வது படமாக இப்படம் உருவாகிறது.