ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிக்கும் இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக அங்கு நடைபெற்று வந்தது. பிரமாண்டமான வகையில் செட் அமைக்கப்பட இருந்ததால் அதற்கான பணிகளில் இரவு பகலாக ஊழியர்கள் ஈடுபட்டு வந்தார்கள்.
![kajal agarwal](http://image.nakkheeran.in/cdn/farfuture/oIjDNNLbN7nJheuv-O9AeYGG2T9UPl53tP7A7YMMciY/1582175882/sites/default/files/inline-images/kajal-agarwal_3.jpg)
இந்நிலையில், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதை தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். மேலும் இந்த விபத்தில் ஒன்பது பேர் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விபத்தில் இறந்தவர்கள் குறித்த விவரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, ஷங்கரின் பிஏ மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் என்ற மூவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பதிவில், "என்னுடன் பணியாற்றியவர்களின் எதிர்பாராத மரணம், எனக்குத் தரும் மனவலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கிருஷ்ணா, சந்திரன் மற்றும் மது. உங்கள் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள், அன்பு. தனிமையான இந்தத் தருணத்தில் கடவுள் அவர்களுக்கு வலிமையைத் தரட்டும்.
நேற்றிரவு நடந்த பயங்கரமான கிரேன் விபத்தில் அதிர்ச்சி, குழப்பம், ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். உயிரோடு இருந்து இந்த ட்வீட்டைப் பதிவேற்ற ஒரு நொடி மட்டுமே ஆனது. அந்த ஒரு தருணம். நன்றியுணர்வோடு இருக்கிறேன். நேரம் மற்றும் உயிரின் மதிப்பு குறித்து நிறைய கற்றுக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.