![Kadapura kalaikulu movie team interview](http://image.nakkheeran.in/cdn/farfuture/FdW4sB7v2gX3HP7cX6OM7nPfkguh9N0xCnutS7Y2wlc/1689066639/sites/default/files/inline-images/Munish.jpg)
நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக ‘காடப்புறா கலைக்குழு’ படத்தின் குழுவினரைச் சந்தித்தோம். இயக்குநர் ராஜா குருசாமி, நடிகர் முனீஸ்காந்த் மற்றும் நடிகை ஸ்வாதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான விசயங்கள் மற்றும் நடித்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.
இந்தப் படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொன்னவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. நாட்டுப்புறக் கலைகள் என்பது நம்முடைய ரத்தத்திலேயே இருக்கிறது. அந்தப் பின்னணியில் எடுக்கப்படும் இந்தப் படம் நிச்சயமாக ஓடும் என்கிற நம்பிக்கை வந்தது. இயக்குநரை நான் முழுமையாக நம்பினேன். நான் வில்லனாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் இயக்குநர்களுக்கு என்னிடம் உள்ள நகைச்சுவைத் திறமை தெரிந்தது.
நடனக் காட்சிகளில் நடிப்பது எனக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. ஆனால் கரகாட்டக்காரர்களின் கஷ்டத்தை நினைத்துப் பார்க்கும்போது இது ஒன்றுமே இல்லை எனத் தோன்றியது. காளி வெங்கட் என்னுடைய நீண்ட கால நண்பர். இருவருக்குமிடையில் நல்ல புரிதல் இருக்கிறது. அதை வைத்து நாங்கள் இணைந்து நடிக்கும் படங்களை இன்னும் சுவாரசியமாக மாற்றுகிறோம். நான் செய்த கேரக்டரை விஜய் சேதுபதி இந்தியில் செய்கிறார் என்பதைக் கேட்டவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த கேரக்டரை அவர் எப்படி செய்திருக்கிறார் என்பதைப் படம் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும் என்று அவர் என்னிடம் கூறியிருக்கிறார்.