![huma q](http://image.nakkheeran.in/cdn/farfuture/FOyzjS-L0FvI0UzjmGGX3ybHBrw4wSvCHwxRqQe0oxs/1600835057/sites/default/files/inline-images/huma-q.jpg)
பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு எதிராக இந்தி நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்த நிலையில், அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக அவரது முன்னாள் இரண்டு மனைவிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அனுராக் காஷ்யப் பிரபல பாலிவுட் இயக்குனர் ஆவார். சில தினங்களுக்கு முன்னாள் அவருக்கு எதிராக இந்தி நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனையடுத்து இந்தி திரையுலகம் பரபரப்பானது. இதுகுறித்து, அனுராக் காஷ்யப் மறுப்புத் தெரிவித்த நிலையிலும் இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. மேலும் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக, அவரது முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ் ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவியான கல்கி கோச்லீன், அவருக்கு ஆதரவு அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அனுராக் காஷ்யப்புடன் பணிபுரிந்த பெண் நடிகர்கள் அவருக்கு ஆதரவு அளித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் கேங்ஸ் ஆஃப் வஸிபூர் திரைப்படத்தில் அனுராக்குடன் பணியாற்றிய ஹுமா குரேஷி ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அனுராக்கும் நானும் கடைசியாக 2012-13 ஆம் வருடம் பணியாற்றினோம். அவர் ஒரு நல்ல நண்பர். அற்புதமான திறமை கொண்ட இயக்குனர். தனிப்பட்ட முறையில் என்னிடமோ, நான் கேள்விப்பட்ட விதத்திலோ அவர் தவறாக நடந்து கொண்டதில்லை. ஆனால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக சொல்பவர்கள் காவல்துறை, நீதித்துறை என உரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும்.
இதுவரை நான் பேசாமல் இருந்ததற்கு காரணம் எனக்கு சமூக ஊடகத்தில் நடக்கும் சண்டையிலோ, ஊடகங்களின் விசாரணையிலோ நம்பிக்கையில்லை. இந்த பிரச்சனையில் என்னை இழுத்துவிட்டதற்கு நான் கடும் கோபத்தில் இருக்கிறேன். மேலும், ஒரு பெண்ணின் இவ்வளவு வருட கடின உழைப்பும், போராட்டமும், ஆதாரமில்லாத ஒரு குற்றச்சாட்டால் சிறுமைப்படுத்தப்படுகிறது. இதுபோன்ற விஷயங்களிலிருந்து தள்ளியிருப்போம்.
மீடூ இயக்கத்தின் புனிதத்தை காப்பது, ஆண் மற்றும் பெண் என இரண்டு தரப்பின் கூட்டுப் பொறுப்பாகும், இதுதான் எனது இறுதி பதில். இதுபற்றி கருத்து கேட்க இனிமேல் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.