ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரித்து, ஜோதிகா நாயகியாக நடித்திருக்கும் படம் ‘ராட்சசி’. புதுமுக இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கியுள்ள இப்படம் வரும் ஜூலை 5ஆம் தேதி நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அதில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர். அப்போது இப்படம் குறித்து நாயகி ஜோதிகா பேசும்போது…
![jyothika](http://image.nakkheeran.in/cdn/farfuture/K4mtlR_cquTL6TqJGSxLZ3xA1slTZS9lSRrjaX2x5pQ/1561542332/sites/default/files/inline-images/jyothika-1.jpg)
“சூர்யா, கார்த்தியை மட்டும் வைத்து ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் படம் எடுத்தார்கள். நானாக தான் போய் அவர்களிடம் கேட்டேன். ட்ரீம் வாரியர் நிறுவனத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர்கள் எந்த சின்ன படங்கள் தயாரித்தாலும் வெற்றியடைகிறது. அவர்களது கதைத் தேர்வு அற்புதமாக இருக்கிறது. ஆகையால் தான் முதல் முறையாக புது இயக்குநருடன் பணிபுரிகிறேன். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் இருவருமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அவர்களது உதவி இந்தப் படத்தில் நிறையவே இருக்கிறது.
இயக்குநர் கெளதம் 2 மணி நேரம் கதை சொன்னார். அரசாங்க பள்ளி எப்படி நடக்க வேண்டும் என்ற மெசேஜ் ஏற்கனவே வந்திருக்கிறது. ஆனாலும், இந்தக் கதை அவ்வளவு புதிதாக இருந்தது. இதிலிருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் அற்புதமாக இருக்கும். இதிலுள்ள காதல் ட்ராக் புதிதாக இருக்கும். ஒரு அப்பா, பெண்ணோட ரிலேஷன்சிப் புதிதாக இருக்கும். கல்யாணத்துக்கு முன்பே இயக்குநர் எப்படி இவ்வளவு அனுபவம் வாய்ந்தவராக இருக்கிறார் என்று தெரியவில்லை. புதிய இயக்குநர்கள் கதைச் சொல்லும் போது, ஒரு தெளிவுடன் படம் மூலமாக சமூகத்துக்கு என்ன கருத்துச் சொல்லப் போகிறோம் என்று தெளிவாக சொல்கிறார்கள். நடிகர்களின் மார்க்கெட், வியாபாரம் பற்றி யோசிக்காமல் கதைக்கு உண்மையாக இருக்கிறார்கள். இந்தப் படத்தில் எனது புதிய நடிப்பைப் பார்க்கலாம். நீங்கள் நடிக்கலாம், ஆனால் அதில் கீதாராணி டீச்சர் இருக்க வேண்டும் என்று சொல்வார் இயக்குநர். அவரது கோபம் தெரிய வேண்டும் என்பார். பாரதி தம்பி சார் வசனம் எழுதியிருக்கார். அவருக்கு நான் ஒரு வட இந்தியப் பெண் என்ற யோசனை வரவில்லை என நினைக்கிறேன். அவ்வளவு கடினமாக வசனங்கள் இருந்தது. இந்தப் படத்தின் முகமாக இருந்ததில் மகிழ்ச்சி.
ஒளிப்பதிவாளர் கோகுல் என்னை ஒல்லியாக காண்பிக்க ரொம்பவே கஷ்டப்பட்டார். அவர் பணிபுரியும் படத்தில் மீண்டும் நடிக்க ஆசையாக இருக்கிறது. அவரது உழைப்பு அபாரமாக இருந்தது. மதிய உணவு இடைவேளை கூட இல்லாமல் படப்பிடிப்பு செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், எனக்கு இடைவேளை உண்டு. இந்த மாதிரியான ஒரு பெரிய உழைப்பு, எந்தவொரு பெரிய படத்திலும் பார்த்ததில்லை. படம் மீது அவர்களுக்கு இருந்த காதல் அற்புதமானது. இந்தப் படத்தின் நாயகன் ஷான் ரோல்டன். ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் பாடல்கள் கேட்டேன். கேட்டவுடனே பிடித்திருந்தது. அவர் படித்ததை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார். படத்தின் எடிட்டிங்கே புதுமையாக இருந்தது” என்றார்.