கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மெனன், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் யோகி பாபு, வினய், லால், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர், ட்ரைலர், பாடல்கள் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இந்த நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்து நிறைய விஷயங்கள் பேசினர். அந்த வகையில் ஜெயம் ரவி கலந்து கொண்டு பேசுகையில், “மிக அழகான மேடை இவர்களுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அழகை மிக அழகாகப் படம்பிடித்துள்ளார் இயக்குநர். டைட்டிலே அட்டகாசமாக இருந்தது. கிளாசிக் பட டைட்டில் கிடைத்தது மகிழ்ச்சி. படத்தில் நித்யா மேனன் பேருக்குப் பிறகு ஏன் உங்கள் பெயர் எனக் கேட்டார்கள், என் மீதான கான்ஃபிடண்ட் தான். ஏன் கூடாது திரை வாழ்க்கையில் நிறைய விசயங்களை உடைத்துள்ளேன் இது மட்டும் ஏன் கூடாது. ஷாருக்கான் சார் பார்த்துத் தான் இந்த முடிவை காப்பி அடித்தேன். பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை அவர்கள் இல்லாமல் நாம் இல்லை இனி பெண் இயக்குநர்கள் படத்தில் இதை ஃபாலோ செய்வேன்.
எனக்கு மிக கஷ்டமான காலம் இருந்தது, நான் நடித்த படங்கள் ஓடவில்லை, நான் என்ன தப்பு செய்தேன் என யோசித்தேன். என் மீது தவறு இல்லாதபோது ஏன் துவண்டு போக வேண்டும் எனத் தோன்றியது. அடுத்த வருடமே என் மூன்று படம் ஹிட். துவண்டு போவது தோல்வியில்லை, விழுந்தால் எழாமல் இருப்பது தான் தோல்வி. நான் கண்டிப்பாக இந்த வருடம் மீண்டு வருவேன். அடுத்தடுத்து மிக நல்ல வரிசையில் படம் செய்து வருகிறேன். காதலிக்க நேரமில்லை, பாலசந்தர் சார் தன்னுடைய படங்களில் பல விசயங்களை சர்வசாதாரணமாக உடைத்திருப்பார். அதே போல் ஜென் ஜி தலைமுறையில் கிருத்திகா அதைச் செய்துள்ளார்” என்றார்.