![vadivelu](http://image.nakkheeran.in/cdn/farfuture/6V6PAgcRZnJieNsXDqzS6ZgUgEYF1SXJAl538Pc6CFA/1630068942/sites/default/files/inline-images/21_28.jpg)
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான 23ஆம் புலிகேசி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தை இயக்குநர் ஷங்கர் தன்னுடைய எஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். 23ஆம் புலிகேசி திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவெடுத்த படக்குழு, கடந்த 2017ஆம் ஆண்டு அதற்கான பணிகளைத் தொடங்கியது.
இரண்டாம் பாகத்திற்கு 24ஆம் புலிகேசி எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்தப் படக்குழு, சென்னைக்கு அருகில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பைத் தொடங்கியது. படப்பிடிப்புத் தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே படத்தின் நாயகன் வடிவேலுக்கும் படக்குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, தேதி ஒதுக்கியபடி படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் வடிவேலு காலம் தாழ்த்தினார். இது தொடர்பாக தயாரிப்பாளர் ஷங்கர், தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, வடிவேலு திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்பாக பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்த போதிலும், இந்த விவகாரத்தில் சுமூகத் தீர்வு எட்டப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது தீர்வு எட்டப்பட்டுவிட்டதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர் '23-ம் புலிகேசி 2' திரைப்படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார். மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்தை நேரில் அழைத்துப்பேசி மேற்கண்ட பிரச்சினைக்கு சுமூகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் வடிவேலுவை மெர்சல் படத்திற்குப் பிறகு எந்தத் திரைப்படங்களிலும் பார்க்க முடியாமல் தவித்துவந்த தமிழ்க்காமெடி ரசிகர்களை, தயாரிப்பாளர் சங்கத் தரப்பிலிருந்து வெளியான இந்தத் திடீர் அறிக்கை உற்சாகமடைய வைத்துள்ளது.