![Ilayaraja joins hands with Venkat Prabhu for the first time](http://image.nakkheeran.in/cdn/farfuture/0zA8dOGwBwganXZFD0DnX18BZnl2DrmJigSZchmfOUU/1655124075/sites/default/files/inline-images/33_53.jpg)
தமிழ் சினிமாவில் தன் காமெடி கலந்த கதைசொல்லல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் வெங்கட் பிரபு. அந்த வகையில் கடைசியாக அசோக் செல்வனை வைத்து 'மன்மதலீலை' படத்தை இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து நாக சைதன்யாவை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு படம் இயக்கவுள்ளார். 'என்.சி 22' என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கும் 'என்.சி 22' படத்தை பற்றி புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் வெங்கட் பிரபு படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைப்பார். ஆனால் இப்படத்தில் இளையராஜா இசையமைக்க உள்ளதாக சொல்லப்படும் இந்த தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் வெங்கட் பிரபு இளையராஜா கூட்டணி முதல் முறையாக இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.