தமிழ் சினிமாவின் பிதாமகனாகப் போற்றப்பட்ட மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் குறித்து மருது மோகன் என்றவர் 'சிவாஜி கணேசன்' என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று(18.12.2022) நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவாஜிக்கு நெருக்கமானவர்கள் பலரும் கலந்துகொண்ட நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா 'சிவாஜி கணேசன்' புத்தகத்தை வெளியிட, சிவாஜி கணேசனின் மகன்களான ராம்குமார், பிரபு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, "சிவாஜி அண்ணா, என்னை ராசா என்றுதான் அழைப்பார். ஒருநாள் என் ஸ்டூடியோவில் வந்து 'ராசா உள்ளே வரலாமா...' என்று கேட்டார். எனக்கு உடனே கண்ணீர் வந்துவிட்டது. பின்பு அண்ணா உங்கள் வருகைக்குக் காத்திருந்தேன். இதெற்கெல்லாம் எவ்வளவு தவம் கிடந்திருக்கணும் என்றேன். உள்ளே வந்த அவர், உன்னைப் பற்றி நிறைய சொல்கிறார்களே என கேட்க அப்படி சொல்றக்வங்க கதைகளை நம்பிகிட்டு நீங்களுமா அண்ணா என்னை கேட்கிறீர்கள் என்றேன்.
புத்தகத்தில் இன்னும் நான் ஒரு வார்த்தை கூட படிக்கவில்லை. ஆனால் படித்தவர்கள் சொன்ன அபிப்ராயங்களின் படி மருது மோகன் மீது மதிப்பு அதிகமாகிவிட்டது. இவரை வைத்துக்கொண்டே என் ஆசையை இங்கு சொல்கிறேன், ஒருநாள் முழுக்க சிவாஜியைப் பற்றிப் பேசுங்கள் என்று சொல்லி தமிழ்நாடு முழுக்க உள்ள சிவாஜி ரசிகர்களை வரவழைத்து அந்த பேச்சை கேட்க வேண்டும் என்பதுதான். இசையை கால பிராமணம் என்று சொல்வார்கள். சிவாஜி அண்ணனை நேரம் தவறாமை என்பார்கள். அப்படி சொல்வது அவரிடமிருந்து அதனை கத்துக்கொள்ள வேண்டியது. நானும் நேரம் தவறுவதில்லை. அவரோடு நெருங்கிப் பேசுவதற்கும் உரையாடுவதற்கும் கொடுத்து வைத்திருக்கணும்.
யார் அந்த நிலவு என்ற பாடலில் அவர் சிகரெட் பிடிப்பது போல் காட்சி. அந்தப் பாடல் முழுவதும் சிகரெட்டை வைத்திருக்கும் அவர் ஒருமுறை கூட அதனைப் பிடிக்கவில்லை. நீங்கள் அந்த பாட்டை மறுபடியும் பாருங்கள், ஆரம்பத்தில் முழுசாக இருந்த சிகரெட் அப்படியே குறைந்து கொண்டே வரும், முடிவில் கரைந்துவிடும். ஆனால் ஒருமுறை கூட அவர் சிகரெட் பிடிக்கும் ஷாட் பாடலில் வராது. அதனை இயக்குநரோ உதவி இயக்குநரோ பார்த்திருக்க முடியாது. அந்தளவுக்கு கன்ட்யூனிட்டியை இவரே பார்ப்பார்.
தேவர் மகன் பட சமயத்தில் அவருடன் புகைப்படம் எடுக்கப் போனோம். அப்போது திடீரென என்னைக் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த வாலி 'பத்மினிக்கு கூட இப்படி கொடுத்திருக்கமாட்டார் போல" என்று கிண்டலடித்தார். சாதனை படத்தில் அவர் நடித்த ஒரு காட்சியில் நானும் இணைந்து நடித்தது என் வாழ்நாளில் மறக்கமுடியாது. அது ஒரு பெருமையான தருணம். என் மேல ரொம்ப பிரியமாக இருப்பார்.
என்னிடம் ஒருநாள், சில பாடல்களைக் குறிப்பிட்டு நல்லா இசை போட்ருக்கடா என பாராட்டினார். பின்பு பெர்ஃபாமன்ஸ் இருக்கனும்டா... அந்த மாதிரியான ஆட்களுக்குத்தான் இது போன்று இசை அமைக்கணும். சும்மா பாரதிராஜாவுக்கும் அவருக்கும் இவருக்கும் இசை அமைச்சிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்... எனக் கேட்டார். இதனை பாரதிராஜாவிடம் ஏற்கனவே சொல்லியிருக்கேன். சிவாஜி அண்ணனைப் பற்றிப் பேசும் பொழுது கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது" எனப் பேசினார்.