![ilaiyaraaja talk about bharathiraja](http://image.nakkheeran.in/cdn/farfuture/w9odzKu1M1dhyuNyx--Bo5wvT25Xx4o2gtT1SgY-M9I/1649249670/sites/default/files/inline-images/119_11.jpg)
தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான எழுத்தாளரான சு.சமுத்திரத்தின் ஒரு கோட்டுக்கு வெளியே என்ற நாவலை தழுவி 'உலகம்மை' என்ற பெயரில் இயக்குநர் விஜய் பிரகாஷ் திரைப்படமாக இயக்கியுள்ளார். இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். 'உலகம்மை' கதாநாயகனாக மித்ரன் நடிக்க, கதாநாயகியாக கௌரி கிஷன் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் விஜய் பிரகாஷ் , இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட படகுழுவினருடன் இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் பாரதிராஜா இளையராஜாவை பாராட்டி பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "எல்லாரும் உன்னைய பற்றி நிறைய பேசிட்டாங்கடா. இந்த சூரியனை பற்றி எவ்வளவுதான் சொல்றது. இன்றைக்கு வரைக்கும் என் படம் பேசுகிறது என்றால் அதற்கு அவனின் பின்னணி இசைதான் காரணம். அதில் என்ன சிறப்புன்னா ஒரு ரீல ஒரு தடவைதான் பார்ப்பான். உடனே பேப்பரில் 'இதிலிருந்து இதுவரை, இதிலிருந்து இதுவரை... சைலன்ஸ' எனக் குறித்து வைத்து வாசிக்க ஆரம்பித்தான்னா படத்தின் இசை உடனடியாக தயாராகிவிடும். எப்படிடான்னு கேட்டா தெரியாதுன்னு சொல்லுவான். என் நண்பன் என்ற முறையில் சொல்லவில்லை. தொழிலில் இவனிடம் சண்டைபோட்டு சமாதானம் ஆகியிருக்கேன். இவனின் 5 விரல்களிலும் சரஸ்வதி இருக்கிறாள். நாங்க ரெண்டு பேரும் ஒரு காலத்தில் ட்ராமாவில் நடிக்கும் போது மேடையில் வந்து கலாட்டா பண்ணி என்னை வாரு வாருன்னு வருவான்" எனக் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய இளையராஜா, "இந்த விஷயம் என்னென்னா அல்லி நகரத்தில் ஒரு ட்ராமா நடக்குது. ஒரு சீன் முடிஞ்சு அடுத்து சீனுக்கு மாத்திட்டு போக பாரதிராஜாவிடம் ட்ரெஸ் இல்ல. அதனால் என்ன பண்ணாரு, பக்கத்துல உக்காந்து வாசிச்சிட்டு இருந்த என்கிட்ட வந்து சட்டையைக் கழட்டு சட்டையை கழட்டுன்னு சொன்னார். யோவ் என்னையா நான் வாசிச்சிட்டு இருக்கேன், இப்போ வந்து சட்டையை கழட்டுன்னு சொல்றியே, நான் என்னையா பண்றதுன்னு கேட்டேன். அதன் பின் சட்டையை வாங்கிட்டு போய் ட்ராமால நடிச்சிட்டார். இதுல எனக்கு என்ன பிரச்சனைன்னா அடுத்த நாள் தெருவுல இந்த சட்டையைத்தான் நான் போட்டுட்டு போகணும். ஐயையோ இந்த சட்டையை நாளைக்கு நாம தெருவில போட்டுட்டு போனா எல்லாரும் பாரதிராஜா சட்டையைத்தான் இவரு போட்டுட்டு வாராருன்னு பேசுவாங்க. இது தப்பாச்சேன்னு சொல்லிட்டு அதே ட்ராமால இவரு பூட் பாலிஸ் போடுற கதாபாத்திரத்தில் நடிச்சுட்டு இருந்தாரு. அப்போ நான் என்ன பண்ணுனேன் அந்த சட்டையை போட்டுட்டு உள்ள போயி இந்தா என் சூவுக்கும் பாலிஷ் போடுன்னு போய் நின்னுட்டேன்" எனக் கலகலப்பாக கூறினார்.
இதையடுத்து மீண்டும் பேசிய பாரதிராஜா இப்படித்தாங்க மேடையில நிறைய பேர் இருக்காங்கடா சும்மா இருடான்னு சொன்னா கூட கேட்கவே மாட்டான் இஷ்டத்துக்கு நம்மள வாரு வாருன்னு வருவான் என பாரதிராஜா கூறினார்.