திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதிக்கு அருகே உள்ள ஆற்காடு சாலையில், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. காலை, மாலை என 2 ஷிப்ட் முறையில் இயங்கி வரும் இந்த கல்லூரியில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதில் பெண்கள் மட்டுமே 4,500 பேர் படிப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது, இந்த கல்லூரியில் உள்ள குடிநீர், கழிப்பறை என எந்தவித அடிப்படை வசதிகளும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதுகுறித்து மாணவர்கள் புகார் அளித்தும் கல்லூரி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குறிப்பாக பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறை.. மிகவும் சுகாதாரமற்ற நிலையில் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. அந்த கழிப்பறையைச் சுற்றி புதர்கள் வளர்ந்து கிடப்பதால், மாணவிகள் அந்த கழிப்பறைக்கு மிகுந்த அச்சத்துடனே சென்று வருகின்றனர். இதனால் சில மாணவிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த அரசு கல்லூரியின் முதல்வர் அறை அருகே உள்ள பெண்கள் கழிப்பறையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாம்புகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டதால், இதைப் பார்த்த கல்லூரி மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இந்த நிலையில், அரசு கலைக் கல்லூரி முதல்வர் அறை அருகே உள்ள பெண்கள் கழிப்பறையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாம்புகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டதால், கல்லூரி மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர். விஷயம் தெரிந்ததும் உடனடியாக அந்த கழிப்பறைக்குச் சென்ற கல்லூரி மாணவி ஒருவர், அதனை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் சார்பில் "இந்த கழிப்பறையில் பாம்புகள் உலா வருவதால், யாரும் இந்த கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டாம்" என எழுதி, அதனைக் கழிப்பறை சுவற்றில் ஒட்டியுள்ளனர். அதே போல், கல்லூரி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் ஒன்றிணைந்து உடனடியாக இந்த கழிப்பறையைச் சுற்றி மண்டிக் கிடக்கும் முட்புதர்களையும், கழிப்பறையையும் சுத்தம் செய்து, சுகாதாரமான கழிப்பறையாக உருவாக்க வேண்டும் எனக் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து, இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானதைத் தொடர்ந்து, பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "தங்கள் கடமையைச் செய்யாதவர்களை “பெண் கல்வி” சுட்டெரிக்கட்டும்" என பதிவிட்டுள்ளார். இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது, பெண்கள் கழிப்பறையில் பாம்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஸ்பாட்டுக்கு வந்த தீயணைப்புத்துறையினர் சில பாம்புகளைப் பிடித்துச் சென்றனர். அதே போல், கழிவறையைத் தூய்மைப்படுத்தவும் சுற்றுப்புற இடங்களைத் தூய்மைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.