Skip to main content

"உண்மையை மட்டுமே வைத்து எடுக்க வேண்டுமென்றால்" - சூரரைப் போற்று விமர்சனங்களுக்கு கேப்டன் கோபிநாத் பதில்...

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

suriya

 

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம் 'சூரரைப் போற்று'. தீபாவளி விருந்தாக வெளியான இப்படம், ஏர் டெக்கான் என்ற, விமான நிறுவனத்தை ஆரம்பித்த கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. 'சூரரைப் போற்று' படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிற அதே நேரத்தில், இப்படம் கோபிநாத்தின் உண்மையான கதையை அப்படியே கூறாமல், கற்பனை கலந்து கூறுவதாக விமர்சனம் எழுந்தது. இந்தநிலையில், இதுபோன்ற விமர்சனங்களுக்கு கேப்டன் கோபிநாத் பதிலளித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், உண்மையை மட்டுமே வைத்துப் படமாக எடுத்தால், அது டாக்குமென்டரியாகிவிடும் எனக் கூறியுள்ளார். 

 

கேப்டன் கோபிநாத் பதிவிட்டுள்ள ட்விட் வருமாறு:-
       

"என்னுடைய சில பள்ளிகால நண்பர்களும், இராணுவத் தோழர்களும், ஏர் டெக்கானில் சில சகாக்களும், சூரரைப் போற்று படம், என்னுடைய 'சிம்ப்ளி ஃப்ளை' புத்தகத்தில் கூறப்பட்ட உண்மைகளுக்கு மாறாக உள்ளது அல்லது அப்புத்தகம் சித்தரித்த வாழ்க்கைக்கு மாறாக உள்ளது என வருத்தப்படுகின்றனர். அவர்களிடம் நான், இப்படத்தில், சினிமாவுக்காகக் கற்பனை சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த சினிமாவிற்கான மசாலாவை தாண்டி, படத்தில் நல்ல விருந்து உள்ளது எனக் கூறி வருகிறேன்.

 

உண்மைகளை வைத்து மட்டுமே படமெடுக்க வேண்டுமென்றால், அது டாக்குமென்டரியாகிவிடும். அதற்கு மதிப்பு இருந்தாலும், அது வேறுவகையான படமாக இருக்கும். ஒரு 'ஹீரோ' (வெற்றியாளர்) வலிமையானவனாகத் தெரியலாம். ஆனாலும் அவன் பாதிக்கப்படக் கூடியவன்தான். இப்படம், 'ஹீரோக்கள்' வெற்றி பெற, மனைவி மற்றும் குடும்பத்தின் உணர்வுப்பூர்வமான ஆதரவு தேவை என்பதையும், ஹீரோக்களை விட அவர்களது  குழுவினர் அதிகம் தியாகம் செய்யவேண்டுமென்பதையும் காட்டுகிறது. 

 

மனைவியாக இருக்கும் ஒருவர், தனது கனவுகளை தியாகம் செய்யாமல், ஹீரோவின் (கணவனின்) கனவுகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். ஒரு மனைவி, தன்னை இரண்டாம் நிலைக்குத் தள்ளிக் கொள்ளாமல், தன்னுடைய அடையாளத்தையும், சுயமரியாதையையும் இழக்காமல், ஆணுக்கு ஆதரவாக இருக்க முடியும். அதே நேரத்தில், அவர் தனது கணவன் சோர்ந்து போகும்போது, அவனது நம்பிக்கையை அதிகப்படுத்த முடியும். இதனை (இயக்குனர்) சுதா, அபர்ணா மூலம் மிகத் திறமையாக சித்தரித்துள்ளார். 

 

ஒருவன் விழ விழ எழுகிறான் என்பது, இப்படத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது. நான் தோல்வியடைந்தேன். ஆனால், முற்றிலுமாகத் தோற்றுப்போனவன் கிடையாது. நானாக (முயற்சியை) நிறுத்தும் போதுதான் முற்றிலும் தோற்றுப் போனவனாகிறேன். நான் விழ விழ எழுவேன், என ஒருவன் தனக்குள்ளேயே சொல்லிக்கொள்ள வேண்டுமென்பதும், விடாப்பிடியாக ஒன்றைச் செய்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல், நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள், சூரியன் கண்டிப்பாக உதிக்கும், நமக்கான கதவு திறக்கும் என நம்பவேண்டுமென்பதுதான் இப்படம் கூறும் உண்மையான கருத்து. இக்கருத்தினை சூர்யா, அழுத்தமாகவும், ஏற்றுக் கொள்ளும்படியும் அனைவருக்கும் கடத்தியிருக்கிறார்".

 

இவ்வாறு கேப்டன்  கோபிநாத் , தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்