வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் டி.ஏஜிங் தோற்றத்திலும், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மறைந்த விஜயகாந்த்தையும் நடிக்க வைத்துள்ளனர். மேலும் மறைந்த பாடகி பவதாரணியின் குரலை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு பாடலுக்கு பயன்படுத்தி பாடவைத்துள்ளனர்.
இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாளை (05.09.2024) வெளியாகவுள்ளது. இப்படத்தின் முன்பதிவு டிக்கெட் ஆரம்பித்து அனைத்து காட்சிகளும் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசை அணுகியது படத் தயாரிப்பு நிறுவனம். அந்த கோரிக்கை மனுவில் படம் வெளியாகும் முதல் நாளான 05.09.2024 மற்றும் 06.09.2024 ஆகிய தேதிகளில் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு கோரிக்கை வைத்தனர். இதை பரிசீலித்த தமிழக அரசு படம் வெளியாகும் முதல் நாளான 5ஆம் தேதி (05.09.2024) மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கப்பட்டு கடைசி காட்சி நள்ளிரவு 2 மணிக்குள் முடிக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. வழக்கமாக 4 காட்சிகள் திரையிடப்படும் நிலையில் ஒரு காட்சி கூடுதலாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சிறப்புக் காட்சிகளை வழங்கியதற்கும் காட்சி நேரத்தை அதிகப்படுத்தியதற்கும் எப்போதும் போல சினிமாவை ஆதரிப்பதற்கும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
A big thank you to our Tamil Nadu Government and @Udhaystalin Na for granting special shows and extending the show time and supporting cinema as always 🙏 @Ags_production pic.twitter.com/nG5XLwbJjZ— Archana Kalpathi (@archanakalpathi) September 4, 2024