சமீபத்தில் வெளியான 'நடிகையர் திலகம்' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் நடிகை சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கும், ஜெமினி கணேசனாக நடித்த துல்கர் சல்மானுக்கும் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ஜெமினி கணேசன் சாவித்ரிக்கு திடீர் தாலி கட்டுவது, சாவித்ரிக்கு அதிக படங்கள் குவிந்ததால் ஜெமினி கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு குடிக்க தொடங்குவது, இதனால் இருவருக்கும் கருத்து வேற்பாடு ஏற்படுவது, ஒரு கட்டத்தில் சாவித்ரியையும் மது குடிக்கும்படி தூண்டி அவரையும் குடிகாரர் ஆக்குவது போன்று காட்சிகளை வைத்துள்ளனர்.அதன்பிறகு சாவித்ரி மதுவுக்கு அடிமையாகி பாட்டில் பாட்டிலாக குடிப்பது மாதிரியும், இதனால் சர்க்கரை நோய்க்கு ஆளாகி கோமாவில் சிக்கி இறப்பது போன்றும் காட்சிகள் உள்ளன.
இதனையடுத்து இப்படத்தில் தன் அப்பா ஜெமினி கணேசனை தப்பாக சித்தரித்துள்ளதாக ஜெமினியின் முதல் மனைவியின் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது... “சாவித்ரிக்கு அப்பாதான் மது குடிக்க கற்றுக்கொடுத்தார் என்று படத்தில் காட்சி வைத்து இருப்பதை பார்த்து அதிர்ந்து விட்டேன். அவரால் எந்த பெண்ணுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தன்னை விரும்பிய பெண்களைத்தான் திருமணம் செய்துகொண்டார்” என்றார். இவர் இப்படி கூறியிருப்பது திரையுலகில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் இந்த படத்தை ஏற்கனவே பார்த்த சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி வெகுவாக பாராட்டி உண்மையை காட்டியுள்ளனர் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.