![gvm with simbu](http://image.nakkheeran.in/cdn/farfuture/QAQANvWIY_0mDc8TmYHzv1jl0nq2yAsko7rlfYMwaKI/1589175092/sites/default/files/inline-images/gvm%20with%20simbu.jpg)
கடந்த 2010ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியாகி செம ஹிட் அடித்த படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் முதன் முறையாக கெளதமுடன் இணைந்து பணியாற்றினார். படத்தின் முழு ஆல்பமும் எவர்கிரீன் ஹிட்டானது.
படமும் இளைஞர்கள் கொண்டாடும் க்ளாஸிக் படங்களின் வரிசையில் இணைந்தது. சமீபத்தில்தான் இந்தப் படத்தின் பத்து ஆண்டுகளை இளைஞர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். படத்தில் வரும் கார்த்திக், ஜெஸ்ஸி, அவர்களுக்குள்ளே நடக்கும் உரையாடல் என அனைத்துமே ஈர்த்தது.
இதனிடையே, தற்போது நடைபெறும் ஊரடங்கில் சில நாட்களுக்கு முன்பு கௌதம் மேனன் வீடியோ காலின் மூலம் த்ரிஷாவை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கிய செய்தி வெளியானது. அந்த வீடியோவை த்ரிஷாவே பகிர்ந்தார். அப்போது அந்த வீடியோ என்ன மாதிரியான கருவில் உருவாகியது என்று யாராலும் ஊகிக்க முடியவில்லை. தற்போது அந்தக் குறும்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு ‘கார்த்திக் டயல் செய்த எண்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
விடிவி பட ஜெஸ்ஸி, தன்னுடைய முன்னாள் காதலன் கார்த்திக் கதாபாத்திரத்திடம் தொலைபேசியில் பேசுவது போல் வெளியான டீஸரின் மூலம் தெரிகிறது. பின்னணியில் அதை உறுதிப்படுத்தும் வகையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இசை சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் ஜிவிஎம், ‘விடிவி’ பட ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இது தூண்டியுள்ளது. விரைவில் இந்தக் குறும்படம் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கார்த்திக்காக சிம்பு நடிப்பாரா, குறும்படத்தில் சிம்புவும் நடித்திருக்கிறாரா போன்ற கேள்விகள் இணையத்தில் எழுந்துள்ளன. ஆனால், அதை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார் கௌதம் மேனன்.