நடிகர் கார்த்திக்கின் மகனும் இளம் நடிகருமான கௌதம் கார்த்திக், நக்கீரன் ஸ்டூடியோவுடனான சமீபத்திய நேர்காணலில் கலந்து கொண்டார். அந்த சந்திப்பில் அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
"நான் இங்கிலிஷ் சைக்காலஜிதான் படித்திருக்கிறேன். நடிகராக வேண்டும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. திடீரென ஒருநாள் மணி சார் என்னை அழைத்தார். நான் அவரைச் சென்று சந்திக்கையில் தமிழ் பேசுவியா என்று கேட்டார். நான் பேசுவேன் என்று சொன்னவுடன் சரி கிளம்பு என அனுப்பிவிட்டார். பிறகு அவருடன் இணைந்து கதை வேலைகள் செய்தேன். என்னை அவருடைய உதவி இயக்குநராக சேர்த்துள்ளார் என்றுதான் நினைத்தேன். ஒருநாள் ஒரு சீனைக் கொடுத்து நடிக்கச் சொன்னார். எனக்கே ஷாக்கிங்காக இருந்தது. நான் நடித்துக்காட்டியது அவருக்கு பிடித்திருந்ததால் கடல் படத்தில் என்னையே ஹீரோவாக்கிவிட்டார்.
என் தாத்தாவும் அப்பாவும் நடிகர்கள் என்ற எண்ணத்தை நான் வைத்துக்கொள்ளமாட்டேன். தாத்தா, அப்பா காலத்திய படங்களுக்கும் தற்போதைய படங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதனால் அவர்களோடு மக்கள் என்னை ஒப்பிடமாட்டார்கள் என்பதால் அந்தச் சுமை எனக்கு இருந்ததில்லை. சிலர் தாத்தா மாதிரியே இருக்க என்றும் சிலர் அப்பா மாதிரியே இருக்க என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதை தவிர்க்கவும் முடியாது. என்னுடைய வேலையில் அப்பா தலையிட்டதே இல்லை. நான் உனக்கு சொல்லிக்கொடுத்தேன் என்றால் நீயாக எதையும் கற்றுக்கொள்ளமாட்டாய் என்று கடல் படத்தின்போதே அப்பா சொல்லிவிட்டார்.
என் படத்தில் சாதியம் இருக்கிறது என்று அதிகமாகவே விமர்சனங்கள் வருகின்றன. நான் சாதி ஆதரவாளர் அல்ல. எனக்கு ஒரு கதை பிடித்திருந்தால் அதில் நான் நடிப்பேன். நான் முதலில் நடித்த படங்களில் சாதி தொடர்பான விஷயங்கள் இருந்தது என்றால் அப்போது எனக்குத் தெரியவில்லை. தற்போது கேட்கும் கதைகளில் அப்படி எதுவும் இருக்கிறதா என்று மிகவும் கவனமாகக் கேட்கிறேன். தேவராட்டம் படம் ஆரம்பிக்கும்போது அப்படி ஆரம்பிக்கவில்லை. டைட்டில் தேவராட்டம் என்று போடும்போதுதான் இது சாதி படம் என்று பேச்சு வந்தது. நான் டார்கெட் பண்ணி அதுபோன்ற படங்களில் நடிப்பதில்லை".