வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கருடன்’. இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று வெளியான இப்படம், நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாடோடிகள் பழங்குடியின பிரிவை சேர்ந்த மக்கள் சிலர் மாவட்டம் மாவட்டமாக பாத்திரம் விற்கும் வேலை செய்து வரும் நிலையில் வெயில் அதிகமாக இருக்கும் காரணத்தால் கடலூரில் உள்ள 'நியூ சினிமா' திரையரங்கில் 'கருடன்' திரைப்படத்தை பார்க்க சென்றுள்ளனர். ஆனால் காலை 8 மணி முதலே காத்திருந்த போதும் இறுதிவரை திரையரங்கில் டிக்கெட் தர மறுத்து விட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். எல்லோருக்கும் டிக்கெட் வழங்கப்பட்ட நிலையில் தங்களுக்கு ஏன் டிக்கெட் கொடுக்கப்படவில்லை என கேட்டதற்கு தியேட்டர் நிர்வாகம் சரியான பதில் கொடுக்கவில்லை எனத் தெரிவித்த அவர்கள் இது குறித்து காவல் நலையத்தில் புகார் கொடுத்தார்கள். அந்தப் புகாரில் தமிழகத்தில் பல இடங்களில் பல மாவட்டங்களில் உள்ள பல திரையரங்குகளில் சென்று திரைப்படம் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு மட்டும் எங்களுக்கு அனுமதி மறுத்துள்ளார்கள். இதற்கான காரணம் என்ன எனத் தெரிய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்களை கோட்டாட்சியரிடம் மனு அளிக்க காவலர்கள் அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் பலராமன் அந்த மக்களை அரசு வாகனத்தில் அழைத்துச் சென்று, படம் பார்க்க ஏற்பாடு செய்தார். பின்பு டிக்கெட் வாங்கி தற்போது அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு படம் பார்த்து ரசித்தனர். இதே போல் கடந்த ஆண்டு கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல பட வெளியீட்டின் போது, சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் சாலையோரம் பாசிமணி விற்கும் பெண்கள் சிலர் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் டிக்கெட் எடுத்து திரையரங்கம் உள்ளே சென்ற போது, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்தத் திரையரங்க உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவுசெய்து விசாரனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.