Skip to main content

'எஸ்.பி.பி. புதுசா டயர் ஃபேக்டரி வச்சிருக்காப்ல' -எம்.ஜி.ஆர். முன் கிண்டல் செய்த கங்கை அமரன்!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020
spb vintage

 

 

‘பாடும் நிலா’ எஸ்.பி.பியின் நீண்ட கால நண்பரான கங்கை அமரன், தனது ’பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்’ நூலில் பகிர்ந்த நினைவுகளில் ஒரு பகுதி...

 

”என் பையன் வெங்கட்பிரபுவோட மிருதங்க அரங்கேற்றத்துக்கு வர்றதா சொல்லீட்டார் எம்.ஜி.ஆர். "உடல்நலமில்லாத அவர் விழாவுக்கு வந்து சிரமப்பட வேணாமே'னு நினைச்ச நான் அவரோட ஆசிர்வாதத்துக்காக தகவலா சொன்னேன். அழைப்பிதழ்லாம் அடிச்சாச்சு. தெய்வாதீனமா அழைப்பிதழ்ல ஒரு கேப் இருந்தது. ’புரட்சித்தலைவர் மக்கள் திலகம் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.அவர்களின் முன்னிலையில்'னு அந்த கேப்ல பிரிண்ட் பண்ணியாச்சு. அழைப்பிதழ் பார்த்த அமைச்சர்கள் ப.உ.ச., ஹண்டே, க.ராசாராம் மூணு பேரும் டென்ஷனாயிட்டாங்க. "அட முட்டாப்பயலே... என்னாடா இது இன்விடேஷன். சி.எம்.மோட படம் போடல. ஏதோ அவர் பேர இன்செர்ட் பண்ணீருக்க. ஒரு முதலமைச்சருக்கு குடுக்கிற மரியாதையா இது?''னு சத்தம் போட்டாங்க. "பத்திரிக்கை அடிச்சு முடிச்ச பின்னாடி தலைவருக்கு ஒரு தகவலாத்தான் சொன்னேன். அவர் விழாவுக்கு வர்றம்னுட்டார். எனக்கு வேற வழி தெரியல. நான் அவர் மேல உண்மையான அன்பு வச்சிருக்கேன். அந்த அன்புக்கு மரியாத குடுத்து அவர் விழாவுக்கு வந்தாலும் சந்தோஷம். வரலேன்னாலும் வருத்தமில்ல. நான் தலைவர்கிட்டருந்து வேற எதையும் எதிர்பார்க்கல''னு சொன்னேன். நான் என் மனைவி புள்ளைகளோட அழைப்பிதழை எடுத்துக்கிட்டு தலைவரைப் பார்க்க தோட்டத்துக்கு போனேன். எங்கள சாப்பிட வச்சார், பத்திரிகைய வாங்கிப் பார்த்தார். அதிகமா பேச முடியல அவரால. ’நான் வந்துடுறேன்'கிற மாதிரி சைகை செஞ்சார். தலைவருக்கு இருந்த உடல்நிலையை பார்த்த நான் ’தலைவர் விழாவுக்கு வரமாட்டார்'னு நினைச்சேன்.

 

24.11.1987 மியூஸிக் அகாடமியில விழா ஏற்பாடுகள செஞ்சுக்கிட்டிருக்கோம். "தலைவர் இருக்க சூழ்நிலைல விழாவுக்கு வரமாட்டாரு. இவன் பைத்தியக்காரத்தனமா தலைவரோட முன்னிலைல விழா நடக்குது போட்டிருக்கான்”னு என் காதுபடவே பலரும் பேசினாங்க. விழா அரங்கத்துக்கு ரஜினி, கமல், எஸ்.பி. பாலசுப்பிரமணியம்னு ஏகப்பட்ட பிரபலங்கள் வந்து குவிஞ்சிட்டாங்க. திடீர்னு மோப்ப நாய்களைக் கொண்டு வந்து அரங்கத்த சோதிச்சாங்க போலீஸார். அப்பத்தான் தலைவர் வர்றது உறுதியாச்சு. தலைவர் சரியான நேரத்துக்கு வந்துட்டார். முன் வரிசையில் தலைவர் உட்கார்ந்தார். பக்கத்துல ராஜாண்ணனை உட்கார வச்சேன். பிரபலங்கள் வந்து தலைவருக்கு வணக்கம் வச்சிட்டுப் போனாங்க. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தலைவரோட ’அடிமைப்பெண்' படத்துலதான் அறிமுகமானார். இருந்தாலும் "டேய் அமரு... சி.எம்.கிட்ட என்னை அறிமுகப் படுத்திவைடா''னு சொல்ல... நான் அவனை கூட்டிக்கொண்டுபோய் தலைவரிடம் "தலைவரே... எஸ்.பி.பாலசுப்பிரமணியம்''னு சொன்னேன். "ஆ...ங்... தெர்து... தெர்து'' என்றபடி பாலுவின் கையப் பிடிச்சார். "பாலு புதுசா ஒரு டயர் ஃபேக்டரி ஆரம்பிச்சிருக்காப்ல''னு நான் சொன்னேன். உடனே தலைவர் "ங்க...?''னு கேட்டார். நான் எஸ்.பி.பி.யோட இடுப்பைச்சுத்தி சதை போட்டிருந்ததை பிடிச்சுக் காண்பிக்க... தலைவர் சிரிச்சபடி என் முதுகுல செல்லமா ஒரு அடி போட்டார். விழா ஆரம்பிச்சது.” 

இன்னும் பல நினைவுகள், சுவாரசியங்கள்... கிண்டிலில் படித்து மகிழ க்ளிக் செய்யுங்கள்...

பண்ணைப்புரம்

 

 

 

சார்ந்த செய்திகள்