பிரண்ட்ஸ் படத்தில் சிறு வயது விஜய்யாக வந்து அனைவரின் மனதையும் கவர்ந்த நடிகர் பரத் ஜெயந்த் அவர்கள் சமீபமாக சினிமாவிலிருந்து விலகி ஐஸ்க்ரீம் டிரக் என்னும் பெயரில் பிசினஸ் செய்து வருகிறார். தன்னுடைய சினிமா அனுபவங்கள் மற்றும் பிசினஸ் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்...
சின்ன வயதில் நான் பள்ளிக்குச் சென்ற நாட்களை விட ஷூட்டிங்குக்கு சென்ற நாட்கள் தான் அதிகம். எப்போதாவது எக்ஸாம் எழுதத் தான் ஸ்கூலுக்குப் போவேன். பத்தாம் வகுப்பிலிருந்து தான் சீரியஸாகப் படிக்க ஆரம்பித்தேன். நான் சினிமாவில் நல்ல புகழடைய வேண்டும் என்று என்னுடைய அம்மா விரும்பினார். ஷூட்டிங் நேரங்களில் நான் மிகவும் அமைதியாக இருப்பேன். உல்லாசம் படத்தில் ஒரு பாடலில் நடித்தேன். தில் படத்தில் 'ஓ நண்பனே' பாடலில் நடித்தேன்.
சத்யராஜ் சாருடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். ஷக்கலக்க பூம் பூம் சீரியல் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. அந்த சீரியலில் ரேவதி மேடமுடன் நடித்திருந்தாலும் கடைசி வரை அவரை நான் ஷூட்டிங்கில் சந்திக்கவே இல்லை. இமைக்கா நொடிகள் படத்தில் பணியாற்றினேன். அந்தப் படத்தின் இயக்குநர் என்னுடைய நண்பர் தான். அனுராக் காஷ்யப் சாருடைய நடிப்பு அந்தப் படத்தில் மிரட்டலாக இருந்தது. நயன்தாரா மேடம் மிகுந்த ஆளுமை பெற்றவர். விஜய் சேதுபதி சாருடைய காட்சிகளை கடைசியாகத் தான் எடுத்தோம். நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிக்கவும் எப்போதும் தயாராக இருக்கிறேன்.
சினிமாவிலிருந்து விலகி விளம்பரத் துறையிலும் நான் பணியாற்றியிருக்கிறேன். அதில் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. வித்தியாசமாக என்ன செய்யலாம் என்று யோசித்தபோது கிடைத்தது தான் ஐஸ்கிரீம் ட்ரக் ஐடியா. இது சென்னையின் முதல் ஐஸ்கிரீம் ட்ரக். காரமான ஐஸ்கிரீம் நம்முடைய ஸ்பெஷல். எல்லாருக்குமே ஐஸ்கிரீம் சாப்பிடப் பிடிக்கும் தான். அதில் இன்னும் இன்னும் என்ன வித்தியாசம் செய்யலாம் என்று மோர் மூலமாக ஐஸ்கிரீம், அதில் கொத்தமல்லி கருவேப்பிலை தூவித் தருவது போன்றதெல்லாம் முயற்சித்தேன். பிசினஸ் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.