ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
இப்படத்தின் இசை வெளியீட்டின் போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என ரஜினி விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இன்று (09.02.2024) இப்படம் வெளியாகியுள்ளது. படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, “என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்” எனக் குறிப்பிட்டு ரஜினி அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனிடையே ரஜினி ரசிகர்கள் வழக்கம் போல் திரையரங்கு முன்பு கூடி பட்டாசு வெடித்து, மேள தாளத்துடன் படத்தை வரவேற்றனர். மேலும் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடினர்.
அந்த வகையில் திருச்சியில் ரஜினி ரசிகர்கள், ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு கொடி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்த கொடி சிவப்பு நிறத்துடன், நடுவில் மஞ்சள் நிற வளையத்திற்குள் பச்சை நிறத்தில் ஐஸ்வர்யா முகம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கொடி குறித்து பேசிய ரசிகர் ஒருவர், “தலைவரின் மகள் என்பதால் அவரை சிறப்பிக்கும் வகையில் இந்த கொடியை அறிமுகப்படுத்துகிறோம். புரட்சிகரமான கருத்தை இப்படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கிறாங்க. அதற்காக சிவப்பு நிறம். மிதமான நடைமுறையில் படத்தை கொண்டு போயிருக்காங்க. அதற்காக மஞ்சள் நிறம். அவர் என்றைக்குமே வெற்றியடைய பச்சை நிறம் வைத்திருக்கிறோம்” என்றார்.