![First look poster release of VidaaMuyarchi](http://image.nakkheeran.in/cdn/farfuture/QgsObhhp8rUEGoqougGJsuUS_6eNmrMpUywKpTVYUBc/1719756984/sites/default/files/inline-images/vidamurachi-art-1.jpg)
அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இப்படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், திடீரென்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
மேலும் விடாமுயற்சி படத்தில் எஞ்சியுள்ள படப்பிடிப்பை நிறைவு செய்ய படக்குழு அஜர்பைஜான் செல்லவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கியது. இப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படும் வீடியோவை அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், அஜித்தும், ஆரவ்வும் காரில் அமர்ந்திருந்தவாறு இருக்கின்றனர். அந்தக் காரை அந்தரத்தில் தொங்கவிட்டுச் சுழற்றியவாறு படப்பிடிப்பு நடக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.
![First look poster release of VidaaMuyarchi](http://image.nakkheeran.in/cdn/farfuture/bUKpOiJni3PQDLmdlP3UpX6G4Mp2mHEm9YvqFkbkeDc/1719757002/sites/default/files/inline-images/vidamurachi-art.jpg)
இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் முதல் போஸ்டரை (first look) படத் தயாரிப்பு நிறுவனம் இன்று (30.06.2024) வெளியிட்டுள்ளது. அதன்படி வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ‘அவர் பாதையில் (ON HIS PATH)’ எனக் குறிப்பிட்டு தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மே 1 ஆம் தேதி அஜித் குமாரின் பிறந்த நாளையொட்டி விடாமுயற்சி படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஒரு ஆண்டுக்குப் பிறகு தற்போது விடாமுயற்சி படத்தின் முதல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.