அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இப்படத்தின், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இன்னும் சில தினங்களில் வீடு திரும்பவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து தற்போது 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.
இந்த சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர்
நடிகர் அஜித்குமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்.#Ajithkumar— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 8, 2024