![durai vaiko wishes surya oscars academy membership](http://image.nakkheeran.in/cdn/farfuture/jKTb6eH-6R7GVOBpJYDZdE6LR2yvgbKJtp2oaQehl_I/1656760534/sites/default/files/inline-images/1139.jpg)
உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான 94-வது ஆஸ்கர் விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவில் வில் ஸ்மித்தின் நடவடிக்கை பெரும் பேசும் பொருளாக மாறி, பின்பு வில் ஸ்மித் 'அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்' அமைப்பின் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்' அமைப்பில் சேர நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை தாழ்மையுடன் ஏற்றுக்கொண்ட நடிகர் சூர்யா ஆஸ்கர் அகாடமிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினராக இணையும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ள சூர்யாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற எம்.பி கனிமொழி, ஜோதிமணி, பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன், திமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் மற்றும் பல திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் மதிமுக கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள். தி அகாடமி விருது தேர்வு குழுவில் இடம் பெற அழைப்பு பெற்றுள்ள தென்னிந்தியாவின் ஒரே திரை நட்சத்திரம் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது தந்தையும் நடிகருமான சிவக்குமார் அவர்களிடம் தொலைபேசியில் 29.06.2022 அன்று உரையாடினேன். தலைவர் மற்றும் எனது வாழ்த்துகளை சூர்யாவுக்கு தெரிவிப்பதாக அவர் உறுதி அளித்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.