இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்தி வீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து அதை மறுத்து அமீர் அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக நின்றனர். மேலும் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக காட்டமாக அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து கரு. பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்டோரும் ஞானவேல் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இப்படி தொடர்ந்து திரைப் பிரபலங்கள் இந்த விவகாரம் தொடர்பாக பேசி வந்த நிலையில், ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டார். அதில், “அமீரின் சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது எனக் குறிப்பிட்டு சசிகுமார் அறிக்கை வெளியிட்டிருந்தார். பின்பு சமுத்திரகனியும் “வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது. பொது வெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்” எனக் குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியன் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அவர் கூறிய கருத்துகள் தொடர்பாக அமீர் பல்வேறு கேள்விகளை முன்வைத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய எஸ்.ஆர் பிரபாகரன் தற்போது உண்மை பேச வைத்து அவரின் பெருமைகளை உலகறிய செய்ததற்காக, ஞானவேல் ராஜாவுக்கு நன்றி என குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் , “அடித்த புயலில் ஒரு உண்மை செத்துவிடக்கூடாது என்பதற்காக இந்த கடிதம். இதுவரை கடந்த 17 ஆண்டுகளாக அண்ணன் அமீர் அவர்கள் மீது நீங்கள் தூவிய விஷவிதை விருட்சமாய் மாறி அண்ணன் அமீரின் திரை பயணத்தையே திசைமாற்றி போட்டுவிட்டது. நீங்கள் திட்டமிட்டு பரப்பிய எந்த குற்றச்சாட்டுக்கும் அவர் இதுவரை எந்த பதிலையும் தரவில்லை. ஆனால் அவரை ஒரு பொய்யனிடமிருந்து காப்பாற்ற ஒரு பெரும் படையொன்று திரண்டு அவர் பின்னால் அல்ல முன்னால் நிற்கிறது.
அவர்கள் பேசிய உண்மைகள் அண்ணன் அமீர் எவ்வளவு நேர்மையானவர், எப்படிப்பட்ட பெரும் படைப்பாளி என்று உலகறிய செய்திருக்கிறது. மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் இந்த மூன்று படைப்புகளுமே போதும். அண்ணன் அமீரை இன்னொரு பாரதிராஜா-வாக ஏற்றுக்கொள்ளலாம் எனத்தோன்றுகிறது. அவர் மீது நீங்கள் சேற்றை வாரி இறைத்து அவருக்கு அதரவாக எல்லோரையும் உண்மை பேச வைத்து அவரின் பெருமைகளை உலகறிய செய்ததற்காக, உங்களுக்கு பெரும் நன்றி. உண்மை என்று ஏதேதோ பேசினீர்களே. இப்போது நாங்கள் உண்மை பேச ஆரம்பிக்கட்டா? ஒரு அரசியல் பின்புலம் கொண்டவரிடம் பணத்தை பல மடங்கு பெருக்கி தருவதாக கூறி 100 கோடி பெற்று பின் மொத்த பணத்தையும் தராமல் நீங்கள் ஏமாற்றி விட்டதாக ஒரு செய்தி திரைத்துறை எங்கும் உலா வருகிறதே, அதை பற்றி பேசுவோமா? அல்லது உங்களின் உண்மைத்தன்மை பற்றி பேசுவோமா?
உங்களின் கிரிமினல் தனத்தால் இன்னும் உங்களை பற்றிய உண்மைகள் வெளிவரப்போகிறது இதற்கு ஒரே தீர்வு பேட்டியோ மன்னிப்பு கடிதமோ அல்ல, நீதி மன்றத்தில் உள்ள வழக்கை விரைவாக முடித்துக்கொண்டு, இடையில் பேசும் இடைத்தரகர்களின் பேச்சில் மாட்டிக்கொள்ளாமல் 17 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு பணத்தை ஏமாற்றினீர்களோ அதன் இன்றைய மதிப்பு என்னவோ அதை அண்ணன் அமீர் அவர்களிடம் காலம் தாழ்த்தாமல் ஒப்படைத்து இந்த பிரச்சனையை நீங்கள் முடித்து கொள்வதுதான்” என குறிப்பிட்டுள்ளார்.