சென்றவாரம் அருண்விஜய் நடித்து வெளியாகியுள்ள தடம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அருண்விஜய் இருவேடங்களில் நடித்திருக்கும் இப்படம் விருவிருப்பான திர்லர் படமாக அமைந்துள்ளது. தொடர்ந்து படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. தடயறத்தாக்க, மீகாமன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தடம் திரைப்படத்தையும் சுவாரசியமான திர்லர் திரைப்படமாகக் கொடுத்து தனது தனித்துவத்தை நிருபித்துள்ளார். திர்ல் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் நமது உரையாடலின் தொகுப்பு.
திரிலர் வகைப் படங்கள் தான் உங்களுக்குப் பிடிக்குமா? அல்லது மக்களின் ரசனையறிந்து தொடர்ந்து திர்லர் படங்களை எடுக்கிறீர்களா?
எனக்கு ரொம்போப் பிடிச்ச படங்கள் ஏதேனும் சமுதாயப் பிரச்சனையை பேசுகிற படமாகவோ, குடும்ப உறவுகள், காதல் மாதிரியான உணர்வுரீதியிலானப் படமாகவோத்தான் இருக்கும். ஆனால், எனக்கு எல்லா விதமான படங்கள் எடுக்கவும் பிடிக்கும். அதன் விளைவாகத்தான் தொடர்ந்து திர்லர் படங்களாக இயக்கிவருகிறேன். இந்த திர்லர் படங்களுக்கு மிக நீண்ட வரலாறு இருக்கிறது. உலகில் எப்போது திரைப்படத்துறைத் தோன்றியதோ அப்போதே திர்லர் வகைப் படங்கள் உருவாகத் தொடங்கிவிட்டது. திர்லர் படங்களில் இருக்கக்கூடிய சவால் என்னவென்றால், மற்றவகையான படங்களில் கதை சொல்லும்போது அவ்வப்போது கதையிலிருந்து வெளியே போயிட்டுவரலாம். ஆனால், திர்லர் படங்களில் பார்வையாளர்களின் கவனம் சிதறாமல் பார்த்துக்கோள்ளவேண்டும். கதையிலிருந்து சிறிது விலகினாலும் அலுத்துவிடும். எனவே, எனக்கு இந்த சவால் பிடித்திருந்தது. தடயறத் தாக்க படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர்களும் நண்பர்களும் தொடர்ந்து இந்தமாதிரியானப் படங்கள் எடுக்கச் சொல்லிக் கேட்டாங்க. அப்படி தொடர்ந்ததுதான் தடம்.
முதலில் இயக்குனர் செல்வராகவன் கூட துள்ளுவதோ இளமை படத்தில் வேலைப்பார்த்தீங்க. அதன்பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் கூட வேலைப் பார்த்தீங்க. அந்த காலகட்டம் எப்படி இருந்துச்சு?
அந்த காலகட்டத்தில் இயக்குனராக வேண்டுமானால் அதற்கான ஒரே வழி, எதாவது ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக சில படங்கள் பணியாற்றியிருக்கவேண்டும் என்பதுதான். அதுதான் சரியும்கூட. திரைப்படம் எடுப்பதற்கான வகுப்புகளெல்லாம் அப்போது இல்லை. எனவே நூற்றுக்கனக்கான இளைஞர்களைப்பொல நானும் பல இயக்குனர்களின் ஆபிஸ் கதவுகளை தட்டியவன் தான். செல்வராகவனை தற்செயலாக சந்திக்கமுடிந்தது. அப்போது அவர், தன்னுடன் ஒத்துப்போகக்கூடிய இளம் உதவி இயக்குனர்களைத் தேடிக்கொண்டிருந்தார். ஓரிருமுறைப் பார்த்தப்பிறகு. என்னை அவர் சேர்த்துக்கொண்டார்.
செல்வராகவன், கௌதம் மேனன் இருவரிடமிருந்தும் நீங்கள் நிறைய கற்றுக்கொண்டிருப்பீர்கள். அவர்களின் தாக்கம் இல்லாமல் படம் எடுப்பதற்கு நீங்கள் எதையெல்லாம் மாற்றிக்கொள்ளவேண்டியிருந்தது.
இரண்டுபேராலும் பாதிக்கப்பட்டவன் நான். இரண்டுபேருமே அதி புத்திசாலியான இயக்குனர்கள். அவர்களுடைய பாதிப்பு இல்லாமல் நான் தனியாக படம் எடுக்கிறேன் என்றால் அது உண்மையாக இருக்க முடியாது. எனக்கு கதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். தடயறத் தாக்க கதையும், மற்றும் சில கதைகளும் நான் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக சேருவதற்கு முன்பே எழுதிவைத்தது. நான் அவர்களின் ஸ்டைலை அப்படியே பின்பற்றததுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அதே நேரத்தில் அவர்களின் பாதிப்பு இல்லாமல் நான் படம் எடுப்பதாக நினைக்கவில்லை. தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் சாயல் என் படங்களில் வந்துவிடும்.
இமைக்கா நொடிகள் படத்தில் நீங்கள் பின்னனிக்குரல் கொடுத்திருக்கீங்க. அதுபோல கௌதம் மேனன் எந்தப் படத்திற்காவது உங்களைக் குரல்கொடுக்கச் சொல்லியிருக்கிறாரா?
காக்க காக்க படம் கையெழுத்தானப் பிறகு அதை ஒரு விழாவாக முன்னேடுத்தோம். அதில் இயக்குனர் பேசவேண்டிய விஷயங்களை என்னை பேசச்சொன்னார் கௌதம் மேனன். அன்று, அவர் பேச வேண்டியவற்றையெல்லாம் நான் தான் பேசினேன். இவ்வாறு தனது உதவி இயக்குனர்களை முன்னிலைப்படுத்துகிற பண்பு கௌதம் மேனனிடம் எப்போதும் உள்ளது.
கௌதம் மேனன் 60 சதவிகித கதையை மட்டும் எடுத்துக்கொண்டு சூட்டிங் சென்றுவிடுவார். மீதமுள்ள கதையை அங்குதான் யோசிப்பார் என்று கூறுவார்கள். அது உண்மைதானா?
நான் பணியாற்றியப் படங்களில் அப்படி இல்லை. காக்கக் காக்க படத்தின் போதுக் கிளைமேக்ஸ் தவிர முழுக்கதையும் தயாராக இருந்தது. வேட்டையாடு விளையாடு படத்திலும் கிளைமேக்ஸ் தவிர அனைத்தும் எழுத்துவடிவில் தயாராக இருந்தது. அவர் மனதில் நான்கைந்துக் கிளைமேக்ஸ்களை யோசிச்சு வைத்திருப்பார். கதையைக் கொஞ்சம் முன்னகர்த்திப் பார்ப்பார், அதற்கான கிளைமேக்ஸ் தானாக உருவாகவேண்டும் என்று நினைப்பார். அவர் தயாரிப்பில்லாமல் சூட்டிங் போகிறார் என்றுச் சொன்னால் அது தவறு. அவரின் மனதில் வைத்திருக்கும் நான்கைந்து கிளைமேக்ஸ்களில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்து ஒரு கிளைமேக்ஸை உருவாக்குவார்.
நீங்களும் கதைச் சொல்லும்போது முழுக்கதையைச் சொல்லமாட்டீர்கள் என அருண்விஜய் சொல்லிருந்தாரே.
பொதுவாக நான் சூட்டிங் போகிறதுக்கு முன்பு முழுக் கதையையும் எழுத்துவடிவில் வைத்திருப்பேன். ஆனால், சில விஷயங்களை முழுமையாக நடிகர்களிடம் சொல்லமாட்டேன். அதிக தகவல்களைச் சொல்வது நடிகர்களை குழப்பிவிடும். அருணுக்கு சுலபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, ஒரு கேரக்டருக்கான காட்சிகளை முதலில் சூட் பண்ணினோம், இன்னொரு கேரக்டரை அடுத்ததாக சூட் பண்ணினோம். கிளைமேக்ஸில் இரண்டு கேரக்டரும் சந்திக்கிற காட்சி வரும், அதை முன்னாடியேச் சொல்லி குழப்பிவிட வேண்டாம் என நினைத்தேன்.
தடம் படம் ஒரு உண்மைச்சம்பவத்தை தழுவியக் கதை என சொல்லியிருந்தீர்கள். அது எங்கு நடந்தது?
இதை நான் ஒரு செய்தியாகத்தான் படித்தேன். மலேசியாவில் இரு தமிழ் இளைஞர்களுக்கு நடந்த சம்பவம் அது. அதைப் படித்ததும் இப்படியெல்லாம் நடக்குமா என ஆச்சரியமாக இருந்தது. அதில் ஆராயத் தொடங்கியபோது உலகம் முழுவதும் இதேமாதிரியான சம்பவங்கள் நடந்திருப்பது தெரியவந்தது. மலேசியா, ஜெர்மனி, யுனிடெட் ஸ்டேட், இன்னும் பல நாடுகளிலும் நடந்திருக்கிறது. எல்லா சம்பவங்களிலும் ஒரேமாதிரியான விசாரனை முறைகளும், குழப்பங்களும் இருந்தன. அதை அடிப்படையாகக் கொண்டுதான் தடம் படத்தின் கதையை எழுதினேன்.