ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் அகமத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இறைவன்'. இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படத்தின் ட்ரைலர் நாளை (03.09.2023) வெளியாகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்து அகமத் பேசுகையில், "இந்தப் படத்தை நாங்கள் ஒரு மர்டர் மிஸ்டரி திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறோம். பொதுவாக மர்டர் மிஸ்டரி படங்கள் எப்படி இருக்குமோ அப்படி இந்த படம் இல்லாமல் வேறு ஒரு டெம்ப்ளேட்டில் இப்படம் இருக்கும். அது உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும். ஜெயம் ரவிக்கு கதை பண்ணும் பொழுது அவர் நிறைய போலீஸ் கதைகள் செய்துவிட்டார். அப்படி இருக்கும் சமயத்தில் இந்த படத்தின் கதையை அவரிடம் கூறும் பொழுது மற்ற போலீஸ் கதைகளில் இருந்து இதில் எந்த அளவு வித்தியாசப்படுத்தி கதை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு வித்தியாசப்படுத்தி படம் செய்து அவரை சம்மதிக்க வைத்தோம்.
நயன்தாரா, அவரது திருமணத்திற்கு முன்பே இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டார். நான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் செய்து இருக்கிறேன் எனக் கேட்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த படம் வெறும் எட்டு ஒன்பது மாதத்திற்குள் நடந்து முடிந்துவிட்டது. நடுவில் கொரோனா காலகட்டம் என்பதால் அதன் காரணமாக படத்தை அந்த சமயத்தில் எடுக்க முடியவில்லை. அதன் பிறகு படத்தை ஆரம்பித்த நாங்கள் வெறும் 8, 9 மாதங்களிலேயே இப்படத்தை முழுவதுமாக முடித்து விட்டோம்.
இவ்வளவு நட்சத்திர பட்டாளத்தை வைத்துக் கொண்டு இவ்வளவு சீக்கிரமாக முடிப்பது என்பது மிகப்பெரிய காரியம். அதை நாங்கள் திறம்படச் செய்திருக்கிறோம். மற்ற சைக்கோ படங்களில் இருப்பது போல் இந்தப் படத்தில் கொடூரக் கொலைகள் இருக்கின்றன. அதை பார்க்கும் பொழுது ஒருவித இனம் புரியாத பயம் நம்முள் ஏற்படும். அந்த மாதிரியான பயத்தையே இப்போதுள்ள ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் ரசனைக்கேற்ப இப்படத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். அவர்கள் மட்டுமல்லாது குடும்ப ரசிகர்களுக்கும் இந்த படம் ஒரு பயம் கலந்த அனுபவத்தை கொடுத்து ரசிக்கும்படியாக அமையும் என்று நம்புகிறோம். இந்த படம் செப்டம்பர் இறுதியில் திரைக்கு வரவிருக்கிறது. நன்றி" என்றார்.