வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை பாகம் 1' படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்த அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்டோர் படக்குழுவினரை பாராட்டியிருந்தனர்.
இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி உள்ளிட்டோர் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழில் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் அல்லு அரவிந்த் வெளியிடுகிறார். வருகிற 14 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனிடையே மக்களுக்கு நன்றி தெரிவித்து விடுதலை 2 விரைவில் வரும் என சூரி அறிக்கை வெளியிட்டிருந்தார். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து சக்சஸ் மீட் நடத்தியது படக்குழு. இதில் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் படத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த், படத்தை பார்த்து நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் "இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக் காவியம்" என அவரது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியிருந்தார். இதற்கு சூரி, "யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன்" என நெகிழ்ச்சியுடன் ரஜினிக்கு நன்றி தெரிவித்தார்.
இதனிடையே பல்வேறு தரப்பிடமிருந்தும் விடுதலை படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் விடுதலை பார்த்து படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வெற்றிமாறன், நீங்கள் ஒரு ஜீனியஸ். ஒரு அழுத்தமான கதையில் மனிதர்களின் எமோஷனை யதார்த்தமாக திரையில் காண்பித்துள்ளார். படத்தின் முதல் ரயில் விபத்து காட்சி அவர் தொழில்நுட்ப ரீதியாக ஜீனியஸ் என்பதை காண்பிக்கிறது" எனக் குறிப்பிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். இதற்கு சூரி நன்றி தெரிவித்துள்ளார்.
VETRIMARAN you absolute genius . You are unreal.
What a realistic portrayal of human emotions through such a raw and hard-hitting subject.
The first train crash sequence shows his genius technically .
Well done soori and cast . Outstanding work❤️#Vetrimaran#ViduthalaiPart1 pic.twitter.com/QQ99oEYZMc— DK (@DineshKarthik) April 8, 2023