Skip to main content

கனவுகளுடன் சென்னைக்கு வந்தவர் மாரிமுத்து - முதல்வர் உருக்கம்

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

cm stalin about marimuthu

 

நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து (57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலில், டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

 

அவரது உடலுக்கு இயக்குநர் வசந்த், சரத்குமார். எம்.எஸ் பாஸ்கர், மாரி செல்வராஜ், பிரசன்னா, சசி, கதிர், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதனிடையே சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு இரங்கல் பதிவினை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த், அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பலரும் இரங்கல் பதிவினை பகிர்ந்திருந்தனர். 

 

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும். பிரபல நடிகருமான மாரிமுத்துவின் மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, பல்லாண்டுகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநர் ஆனவர் மாரிமுத்து. 

 

ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும், சின்னத்திரையிலும் தனது நடிப்புத் திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ்பெற்றார். மேலும், பல நேர்காணல்களிலும் நிகழ்ச்சிகளிலும் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும். திரைத்துறை நண்பர்களுக்கும். இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்