கார்த்திகி கோன்சால்வேஸ் இயக்கத்தில் குனீத் மோங்கா தயாரித்திருந்த ஆவணக் குறும்படம் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்'. நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் யானை பராமரிப்பு பணியாளர்களாகப் பணியாற்றி வருகின்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி, தாயைப் பிரிந்து உடம்பில் காயங்களுடன் இருந்த ஒரு குட்டி யானைக்கு ரகு எனப் பெயரிட்டு வளர்த்து வந்ததைக் குறித்து இப்படம் எடுக்கப்பட்டது.
இப்படம் 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் விருது வாங்கிய நிலையில், அதன் மூலம் உலகளவில் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி பலரின் கவனத்தை ஈர்த்தனர் . இவர்களை நேரில் அழைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டினார். பின்பு பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு வந்த நிலையில், முதுமலை தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வருகை தந்து பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியைப் பாராட்டினார்.
பின்பு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, பொம்மன் - பெள்ளி தம்பதி, இயக்குநர் கார்த்திகி கோன்சால்வேஸை சந்தித்து அவரவர்களின் பெயரைக் குறிப்பிட்ட சிஎஸ்கே ஜெர்சியை மூன்று பேருக்கும் பரிசாக வழங்கினார். இதையடுத்து கடந்த மாதம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு டெல்லியில் ராஷ்டிரபதி பவனில், பொம்மன் - பெள்ளி தம்பதியுடன் சந்திப்பு மேற்கொண்டு நினைவுப் பரிசு வழங்கினார்.
இந்நிலையில், முதுமலை யானைகள் முகாமில் தற்காலிகப் பராமரிப்பாளராகப் பணியாற்றி வரும் பெள்ளி, அனாதையான யானைக் குட்டிகளை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான சேவையைக் கருத்தில்கொண்டு, தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் யானை பராமரிப்பாளராக நியமிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணி நியமன ஆணையினை முதலமைச்சர் பெள்ளிக்கு வழங்கினார். அப்போது வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் பெல்லியின் கணவர் பொம்மன் உள்ளிட்ட சிலர் உடனிருந்தனர்.