![Cinematographer Murali Speech at Kushi music concert](http://image.nakkheeran.in/cdn/farfuture/0ZXdpdSYdHpH0HVm7uRb7b3Y_PLK7jpXyqmKn3TPJ_g/1692251862/sites/default/files/inline-images/Murali_0.jpg)
விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் 'குஷி' திரைப்படத்தின் இசை நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சி முழுவதும் இசை ஆர்வலர்களையும், பார்வையாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பாடகர்கள் ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், மஞ்சுஷா, சின்மயி மற்றும் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஆகியோர் 'குஷி' படத்தில் இடம்பெற்ற அழகான பாடல்களைப் பாடி அனைவரையும் கவர்ந்தனர்.
'குஷி' படத்தின் டைட்டில் பாடலுக்கு விஜய் தேவரகொண்டாவும் - சமந்தாவும் கைகோர்த்து ஒன்றாக நடித்து, நடனமாடி காண்பித்த போது பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி ரசித்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் இணைந்து தயாரிக்க, சிவ நிர்வானா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிகழ்வில் ஒளிப்பதிவாளர் முரளி பேசியதாவது, ''தெலுங்கில் அந்தல ராட்சசிக்கு பிறகு நான் ஒளிப்பதிவு செய்யும் மற்றொரு காதல் கதை இது. எனது தொழிலில் என்னை ஊக்குவித்த எனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களால்தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. ரவி மற்றும் நவீன் போன்ற நல்ல தயாரிப்பாளர்களை முதன் முறையாக பார்க்கிறேன். நான் வேறு வகையான திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தேன். இயக்குநர் சிவ நிர்வானா எனக்கு காதல் கதையில் பணிபுரியும் வாய்ப்பை அளித்தார். 'குஷி'யில் ஆராத்யா - விப்லவ் கதாபாத்திரங்கள் விரும்பத்தக்கவை. படம் பார்த்த பிறகு இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் மறக்க முடியாது. செப்டம்பர் ஒன்றாம் தேதி இந்த படத்தை அனைவரும் ரசிப்பார்கள்” என்றார்.