கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஒளிப்பதிவாளராக உச்சம் தொட்டு அதன்பின் 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலமாக முழு நேர நடிகராக கவனம் ஈர்த்த 'நட்டி' என்கிற நட்ராஜ் தற்போது நடித்துள்ள 'பகாசூரன்' படத்தின் அனுபவம் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
பகாசூரன் படத்தில் நீங்கள் நடித்துள்ள கேரக்டர் எப்படிப்பட்ட தாக்கத்தை உங்களுக்கு ஏற்படுத்தியது?
மோகன் ஜி சொன்ன கதையில் உயிரோட்டம் இருந்தது. இன்றைய தேதியில் செல்போன்களைப் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அவற்றால் பல நன்மைகள் இருந்தாலும், நம்மையும் மீறி சில செயலிகள் நம்மை பாதிக்கின்றன. இதற்கு வயது வித்தியாசமே கிடையாது. அதில் யார் சிக்கினாலும் அவர்களுடைய வாழ்க்கையே புரட்டிப் போடப்படுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது பயமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களோடு பேசும்போது அவர்களுடைய வறுமை எவ்வாறு தவறான நபர்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது என்பது புரிந்தது. அதை வைத்துப் பணம் பறிக்கிறார்கள் அல்லது தங்களுக்குத் தேவையானவற்றை சாதித்துக் கொள்கிறார்கள். சமுதாயத்தோடு நாம் இணைந்து வாழாமல் இருந்தால் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டி வரும்.
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை நீங்கள் பயணித்ததில் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவங்கள் உண்டா?
நிச்சயமாக. இந்த வேலை செய்பவர்களை எளிதில் அடையாளம் காண முடியாது. மக்களை எளிதாக ஏமாற்றும் வகையில் பேசுவார்கள். தங்களுடைய முகத்தை மறைத்துக் கொள்வார்கள். ஏதாவது ஒரு விஷயத்திற்காக ஏங்குபவர்கள் தான் இவர்களுடைய டார்கெட். முதலில் அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்துவிட்டு பின்பு தங்களுக்குத் தேவையானதை சாதித்துக் கொள்வார்கள். இதனால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவற்றையெல்லாம் கேள்விப்படும்போது அதிர்ச்சியாக இருந்தது. இதை மக்களிடம் எடுத்துச் சொல்வது தான் 'பகாசூரன்'.
ஒளிப்பதிவாளராக இருந்து நடிகரானவர் நீங்கள். இயக்குநராக இருந்து நடிகரானவர் செல்வராகவன். அவரோடு இணைந்து நடிக்கும் அனுபவம் எப்படி இருந்தது?
இந்தப் படத்தில் பீமராசுவாக செல்வராகவன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரத்தில் அவ்வளவு எதார்த்தத்தைப் பிரதிபலித்தார். அவருடைய நடிப்பைப் பார்க்கும்போது "இவருக்கு தான் அனைத்து அவார்டுகளும் வரப்போகிறது" என்று இயக்குநரிடம் கூறினேன். வலியை உள்வாங்கி அவர் நடித்த விதம் அற்புதமாக இருந்தது. அதனால்தான் அவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் பெரிய உயரத்தை அடைந்துள்ளனர். அவர் இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
ஏன் ஒளிப்பதிவாளராக அதிக தமிழ் படங்கள் செய்வதில்லை?
நல்ல கதை, நல்ல சம்பளம், தேவையான கருவிகள் என அனைத்தும் சரியாகக் கிடைக்கும் படங்களை ஏற்றுக்கொள்கிறேன். 'புலி' படத்தில் என்னுடைய பணி சவாலாக இருந்தது. அதுபோல் என்னுடைய உழைப்புக்கு தீனி போடும் அனைத்து வாய்ப்புகளையும் நிச்சயம் ஏற்றுக்கொள்வேன்.