![gg](http://image.nakkheeran.in/cdn/farfuture/Mkwjhw0zSATEMzXUSsEnlaeYPef8wrLL4ZZZaJXgju4/1597283707/sites/default/files/inline-images/64674577Chiranjeevi_%2814%29.jpg)
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு நேற்று முன்தினம் கடும் மூச்சு திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 10ஆம் தேதி அவரது உடல்நலம் சீராகி வீடு திரும்பினார். சஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டி திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில், அவர் தன்னுடைய உடல்நலம் குறித்தும், சினிமாவிலிருந்து சில காலம் ஓய்வு எடுக்கவுள்ளதாகவும் ட்விட்டரில் பதிவிட்டார்.
இதையடுத்து அவருடைய உடல்நிலையில் உள்ள பிரச்சனை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும் அதிகாரபூர்வமாக எதுவுமே உறுதிப்படுத்தப்படுத்தாத நிலையில், நேற்று மாலை சஞ்சய் தத் நான்காம் கட்ட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் புதிய தகவல் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த திரையுலகினர் பலரும் சஞ்சய் தத்துக்கு ஆறுதல் கூறி வரும் நிலையில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சஞ்சய் தத் குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
"அன்பான சஞ்சய் தத் பாய், இந்த உடல்நல பிரச்சனையை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதை அறிந்து வேதனையடைகிறோம். ஆனால் நீங்கள் ஒரு போராளி & பல ஆண்டுகளாக பல நெருக்கடிகளை வென்றிருக்கிறீர்கள். பறக்கும் வண்ணங்களுடன் நீங்கள் இதிலிருந்து வெளியே வருவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் விரைவாக குணமடைய எங்கள் அன்பும் பிரார்த்தனையும்" என கூறியுள்ளார்.