மதுரை தல்லாகுளம் பட்டாலியன் காவல் குடியிருப்பை சேர்ந்த காவல்துறை சப்- இன்ஸ்பெக்டர் முருகசுந்தரம் என்பவரின் மகளான ஜோதி துர்கா என்ற மாணவி கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி மதிப்பெண் குறைவாக பெற்ற நிலையில், இந்த ஆண்டிற்கான நீட் தேர்விற்கு படித்துகொண்டிருந்தபோது, நேற்று இரவு தனது தந்தையிடம் தேர்வு குறித்து அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எப்போதும் தனது தோழியுடன் இரவு முழுவதிலும் படித்துகொண்டிருக்கும் சூழலில் நேற்று தோழி இல்லாத நிலையில் படித்துகொண்டிருந்துள்ளார். அதிகாலையில் தேநீர் வழங்குவதற்காக அறையை தட்டியபோது திறக்காத நிலையில் கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உடலை கைப்பற்றிய தல்லாகுளம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை குறித்து போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இறந்த மாணவிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் சேரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு இந்த குழந்தைகளுக்கு எந்த பள்ளியில் சொல்லிக்கொடுப்பது. இத்தனை வருடம் வளர்த்த பெற்றோர்களை ஏமாற்ற எப்படி மனம் வருகிறது. முதலில் மாணவர்களுக்கு தேவை படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம் என்ற பயிற்சி. மக்களே குழந்தைகளை இழக்காமல் இருக்க சிந்தியுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.