விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். இதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த உள்ளிட்ட சில நிர்வாகிகள், நேற்று டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கட்சியைப் பதிவு செய்வதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இதனிடையே கட்சி பெயர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். இது ஒரு புறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து டெல்லியிலிருந்து, சென்னை வந்தடைந்த புஸ்ஸி ஆனந்த், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எங்கள் தலைவர் தளபதியின் சொல்லுக்கிணங்க, தமிழக வெற்றி கழக கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருக்கிறோம். அதற்கான ஆவணங்களை கொடுத்திருக்கிறோம். மீதி எல்லாம் கட்சியின் அறிக்கையில் எங்கள் தலைவர், விவரமாக சொல்லியிருக்கிறார். அதன்படி நாங்கள் நடந்து கொள்வோம்.
கட்சி தொடர்பாக அதிகாரப்பூர்வ ஆட்களை நாங்கள் நியமிப்போம். அவர்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிப்பாங்க. எதுவாக இருந்தாலும் தலைவரின் அனுமதி பெற்று தான் நான் சொல்ல வேண்டும். தளபதி ரசிகர்கள் உட்பட எல்லோரும் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அதோடு ரசிகர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தமிழக வெற்றி கழகத்தை மிக சிறப்பாக வரவேற்கிறார்கள்” என்றார்.