தமிழில் காந்தர்வன், சிங்கம் புலி, மல்லுக்கட்டு உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மலையாள நடிகை ஹனி ரோஸ். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக அம்மொழியில் வெளியான ‘ராணி’ படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் ஹனி ரோஸ் காவல் நிலையத்தில் தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஜாமீனில் வெளிவராதப் பிரிவுகளின் கீழ் பாபி செம்மனூர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பாபி செம்மனூர் சிறப்பு புலனாய்வு குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். பாபி செம்மனூர் நகை வியாபாரி என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கைதானது குறித்து ஒரு ஊடகத்திடம் பேசிய ஹனி ரோஸ், “இன்று எனக்கு மிகவும் அமைதியான நாள். நான் முதல்வர் பினராயி விஜயனிடம் இந்த விவகாரத்தை சொன்ன போது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்” என்று தெரிவித்தார்.