மம்மூட்டி - கெளதம் மேனன் கூட்டணியில் மலையாளத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்’. இப்படம் மூலம் கௌதம் மேனன் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் கோகுல் சுரேஷ் , சுஷ்மிதா பட் , விஜி வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தர்புகா சிவா இசையமைக்க மம்மூட்டியே தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தின் கதையை நீரஜ் ராஜன் எழுதியிருக்க திரைக்கதை மற்றும் வசனங்களை நீரஜ் ராஜன், டி.ஆர். சூரஜ் ராஜன், கௌதம் மேனன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலையில் பூஜையுடன் ஆரம்பித்து செப்டம்பரில் மம்மூட்டி சம்பந்தமான படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. அதன் பின்பு சில வாரங்கள் கழித்து மொத்தப் படப்பிடிப்பும் முடிந்ததாக தெரிகிறது. முதல் முறையாக முன்னணி பிரபலங்களான மம்மூட்டி - கெளதம் மேனன் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஜனவரி 23 வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரில், துப்பறிவும் ஏஜென்சி நடத்தி வரும் மம்மூட்டி, நடிகர் கோகுலை முதல் கேஸிற்கு தயாராகும் படி கூறி அவருக்கு பணி குறித்து சொல்லித் தருகிறார். பின்பு அவருக்கு ஒரு பெண்ணுடைய பர்ஸ் கிடைக்கிறது. அது யாருடையது என அவர் தேடும் போது பல மர்மமான விஷயங்கள் அவருக்கு தெரிய வருகிறது. இதில் கொலையும் நடப்பதை கண்டுபிடித்த மம்மூட்டி இறுதியில் அந்த கொலையாளியை கண்டுபிடிப்பேன் என கறாராக சொல்கிறார். மேலும் ட்ரைலரை பார்க்கையில், அந்த பர்ஸுக்கு சொந்தக்காரர் யார், அவரை மம்மூட்டி கண்டுபிடித்தாரா, அந்த பர்ஸுக்கு பின் ஏன் இவ்வளவு மர்மங்கள் என்ற கேள்விகள் எழுப்புகிறது. இது அனைத்துக்கும் விடையாக படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இந்தப் படம் காமெடி கலந்த த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.