![vinci da](http://image.nakkheeran.in/cdn/farfuture/U8q8xsSUKVnY-UIqhPUo1sYc3AqAdDhBsTozvdHl1cY/1603946761/sites/default/files/inline-images/vinci-da.jpg)
கடந்த ஆண்டு வெளியான பெங்காலி படம் 'வின்சி டா'. ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கிய இப்படத்தில் ருத்ரனில் கோஷ், ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.
தமிழ்த் திரையுலக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இந்தப் படத்தின் இந்தி மற்றும் தமிழ் உரிமையைக் கைப்பற்ற அணுகியுள்ளார். ஆனால், இந்தி ரீமேக் உரிமை ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டதால், தமிழ் ரீமேக் உரிமையை மட்டும் கைப்பற்றியுள்ளார்.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கிற்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்படத்தின் தமிழ் வசனங்கள் மற்றும் திரைக்கதையை இயக்குனர் ராம் மற்றும் தனஞ்ஜெயன் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இது 'டபுள் ஹீரோ' படம் என்பதால் தமிழில் சில முன்னணி நடிகர்களுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
விரைவில் இயக்குனர் மற்றும் நடிகர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.